துலீப் கோப்பை 2026: 6 காஷ்மீர் வீரர்களுக்கு வாய்ப்பு.. ஆர்ஸ்தீப் சிங் தேர்வு
மும்பை: துலீப் கோப்பைக்கான வட மண்டல அணியின் கேப்டனாக ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த கன்னையா வாதவன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கவுள்ள இத்தொடருக்கான 15 பேர் கொண்ட வட மண்டல அணியில், நடப்பு ரஞ்சி கோப்பை சாம்பியனான ஜம்மு-காஷ்மீர் அணியைச் சேர்ந்த கேப்டன் வாதவன் உட்பட 6 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில், இந்திய சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்களாக அர்ஷ்தீப் சிங் மற்றும் அன்ஷுல் கம்போஜ் ஆகிய இருவர் மட்டுமே இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.ஜம்மு-காஷ்மீர் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டரான கன்னையா வாதவனுடன் இணைந்து தொடக்க வீரர் கம்ரான் இக்பால், ஆல்-ரவுண்டர் அப்துல் சமத், இடது கை சுழற்பந்து வீச்சாளர் அபித் முஷ்டாக், வேகப்பந்து வீச்சாளர்கள் சுனில் குமார் மற்றும் யுத்வீர் சிங் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் 15 பேர் கொண்ட வட மண்டல அணியில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். கடந்த ஓராண்டில் வாதவனின் சிறப்பான ஆட்டத்திறன் காரணமாக அவரது தேர்வு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், அவர் 2019 முதல் 2025 வரை எந்தவொரு முதல்தர போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2025ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்தாலும், இன்னும் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அறிமுகமாகாத இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இத்தொடரில் விளையாடுகிறார். அவருடன், இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் மீண்டும் கம்பேக் கொடுக்க முயலும் அன்ஷுல் கம்போஜும் இடம் பெற்றுள்ளார்.
அர்ஷ்தீப் கடந்த துலீப் கோப்பை தொடரிலேயே தனது திறமையை வெளிப்படுத்தியிருந்த நிலையில், இந்த முறை கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்படத் திட்டமிட்டுள்ளார்.இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்லியின் ஆயுஷ் பதோனி துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் சனத் சங்வான், யாஷ் துல் மற்றும் ஆயுஷ் தோஸேஜா ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
வடமண்டல அணி விவரம்: கன்னையா வாதவன் (கேப்டன்), ஆயுஷ் பதோனி (துணை கேப்டன்), சனத் சங்வான், கம்ரான் இக்பால், யாஷ் துல், ஆயுஷ் தோஸேஜா, அப்துல் சமத், நிஷாந்த் சிந்து, அர்ஜுன் சர்மா, அபித் முஷ்டாக், அர்ஷ்தீப் சிங், சுனில் குமார், அன்ஷுல் கம்போஜ், யுத்வீர் சிங் மற்றும் நிகில் காஷ்யப்.


Click it and Unblock the Notifications

