துலீப் கோப்பை 2026: ருதுராஜ் கேப்டனாக நியமனம்.. சர்பராஸ், பிரித்ஷி ஷாவுக்கு அணியில் இடம்
மும்பை: துலீப் டிராபியில் மேற்கு மண்டல அணியை வழிநடத்த நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை அணியைச் சேர்ந்த சாம்ஸ் முலானி இந்த அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடர் ஆகஸ்ட் 23 ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்குகிறது.
மேற்கு மண்டல அணியில் மும்பையைச் சேர்ந்த ஆறு கிரிக்கெட் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் மற்றும் பேட்டர் சர்பராஸ் கான் ஆகியோர் அடங்குவர். மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி, ரஞ்சி கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முன்னாள் மும்பை தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷாவும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

பிருத்வி ஷா கடந்த ரஞ்சி தொடரில் 11 இன்னிங்ஸ்களில் 48.84 சராசரியுடன் 537 ரன்கள் குவித்தார். இதில் சண்டிகர் அணிக்கு எதிராக 156 பந்துகளில் விளாசிய 222 ரன்களும் அடங்கும். இது ரஞ்சி வரலாற்றின் மூன்றாவது அதிவேக சதமாகும். இதற்கிடையில், காயங்களில் இருந்து குணமடைந்து வரும் மும்பையின் இளம் பேட்டர் ஆயுஷ் மத்ரே இந்தத் தொடருக்கான தேர்வில் பரிசீலிக்கப்படவில்லை.
இந்த காயம் காரணமாக அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐபிஎல் 2026 சீசனின் மீதமுள்ள போட்டிகளையும் தவறவிட்டார். தற்போது அவர் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். ருதுராஜ் கெய்க்வாட் இந்தத் தொடரில் நடுவரிசையில் களமிறங்க உள்ளார். சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இந்த வரிசை தனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.
முன்னதாக, இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட தொடர்களை முழுமையாக வென்ற இந்தியா 'ஏ' அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். சவுராஷ்டிராவின் ஹர்விக் தேசாய் அணியின் முதல் தேர்வு விக்கெட் கீப்பராக இருப்பார் மற்றும் குஜராத்தின் உர்வில் படேல் அவருக்கு துணையாக செயல்படுவார்.
கடந்த 2025-26 ரஞ்சி கோப்பையில் 446 ரன்கள் மற்றும் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய மும்பை ஆல்-ரவுண்டர் முஷீர் கானுக்கு முதல் முறையாக மேற்கு மண்டல அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அணியின் சுழற்பந்து வீச்சை மும்பையின் சாம்ஸ் முலானி மற்றும் தனுஷ் கோட்டியான் ஆகியோர் வழிநடத்துகின்றனர். இவர்களுடன் குஜராத்தின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் சித்தார்த் தேசாயும் இணைந்துள்ளார். சித்தார்த் தேசாய் கடந்த ரஞ்சி தொடரில் 18.42 என்ற சிறந்த சராசரியுடன் 45 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 10 வரை பெங்களூருவில் உள்ள சிறப்பு மையத்தில் நடைபெறவுள்ளது. கடந்த 2025-26 துலீப் டிராபி அரையிறுதியில் மத்திய மண்டல (அணியிடம் தோற்று மேற்கு மண்டலம் வெளியேறியது. அந்த அரையிறுதிப் போட்டியில் கெய்க்வாட் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

