ரன் மெஷின்யா இந்த பையன்.. இரட்டை சதத்தை மிஸ் செய்த முஷீர் கான்.. குல்தீப்பை கதறவிட்ட 19 வயது வீரர்!
பெங்களூர்: துலீப் டிராபி தொடரில் இந்தியா பி அணிக்காக விளையாடிய 19 வயதாகும் இளம் வீரர் முஷீர் கான் 181 ரன்கள் எடுத்து இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 8வது விக்கெட்டுக்கு நவ்தீப் சைனியுடன் இணைந்து முஷீர் கான் 205 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
துலீப் டிராபி தொடரில் இந்தியா ஏ - இந்தியா பி அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா பி அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் சேர்த்திருந்தது. முஷீர் கான் 105 ரன்களுடனும், நவ்தீப் சைனி 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 2வது நாள் ஆட்டத்தை முஷீர் கான் அதிரடியாக தொடங்கினார்.

இதன் காரணமாக 325 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். இதன்பின் பவுண்டரிகள் மூலமாக ரன் குவிப்பை வேகப்படுத்தினார். உணவு இடைவேளையின் போது, இந்தியா பி அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 290 ரன்கள் சேர்த்திருந்தது. தொடர்ந்து ஆட்டம் தொடங்கிய நிலையில், குல்தீப் யாதவ் வீசிய ஒரு பந்தில் அபாரமாக சிக்சரை ஒன்றை விளாசினார் முஷீர் கான்.
அந்த பந்து பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் மேற்கூரையில் சென்று விழுந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் 180 ரன்களை குவித்திருந்ததால், முஷீர் கான் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குல்தீப் யாதவ் பந்தில் மீண்டும் சிக்சர் அடிக்க முயன்று 373 பந்துகளில் 5 சிக்ஸ், 16 பவுண்டரி உட்பட 181 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவருக்கு ஓய்வறையில் அனைவரும் எழுந்து நின்று மரியாதை அளித்தனர். 8வது விக்கெட்டுக்கு நவ்தீப் சைனியுடன் இணைந்து 205 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார் முஷீர் கான். டெய்லண்டர்களுடன் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை 19 வயதிலேயே முஷீர் கான் அறிந்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் என்று அனைவரையும் முஷீர் கான் வெளுத்து கட்டினார்.
பேட்டிங் மட்டுமல்லாமல் முஷீர் கான் பவுலிங்கும் செய்யக் கூடியவர் என்பதால், அவரால் இன்னும் சில ஆண்டுகளில் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. யு19 உலகக்கோப்பை முடிவடைந்து நேரடியாக ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக ஆடிய அவர், அறிமுகப் போட்டியிலேயே இரட்டை சதம் விளாசி அசத்தினார்.
தொடர்ந்து ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியில் சதம் விளாசி அசத்திய அவர், தற்போது துலீப் டிராபி வலிமையான பவுலிங்கிற்கு எதிராக மிகப்பெரிய சதத்தை விளாசி இருப்பது தான் கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்தியா ஏ அணிக்காக ஆடி வரும் பவுலர்கள் பலரும் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள்.
https://x.com/BCCIdomestic/status/1831958344090984709
முஷீர் கான் 181 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய பின், நவ்தீன் சைனி பவுண்டரி மற்றும் சிக்சர்கள் மூலமாக ரன்கள் குவிக்க தொடங்கினார். சிறப்பாக ஆடிய அவரும் அரைசதம் எட்ட, இந்தியா பி அணியின் ஸ்கோர் 300 ரன்களை கடந்து சென்றது. பின்னர் அவரும் 144 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில், இறுதியாக இந்தியா பி அணி 321 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய ஏ அணி தரப்பில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.


Click it and Unblock the Notifications