அனந்தபூர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தற்போது துலீப் டிராபி உள்ளூர் டெஸ்ட் தொடரில் இந்தியா சி அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அனந்தபூரில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் இந்தியா டி அணிக்கு எதிராக இந்தியா சி அணி விளையாடி வருகிறது.
இந்த போட்டியின் இடையே ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு, தோனிக்கு நடப்பது போன்ற ஒரு சம்பவம் நடந்தது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தார். நேராக அவர் ருதுராஜ் கெய்க்வாட்டை நோக்கி ஓடி வந்தார். பின்னர் ருதுராஜ் காலில் விழுந்து வணங்கினார்.

இந்த சம்பவத்தை நேரலையில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுவாக சச்சின் டெண்டுல்கர், தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற மூத்த கிரிக்கெட் வீரர்களின் காலில் ரசிகர்கள் விழுந்து வணங்குவது வாடிக்கையாக உள்ளது. ஆனால், இன்னும் இந்திய அணியில் தனது இடத்தை கூட நிரந்தரமாக ஆக்க முடியாமல் தவித்து வரும் ருதுராஜ் கெய்க்வாட்டின் காலில் ஒரு ரசிகர் விழுந்து வணங்கியது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
இதற்கு காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் என சமூக வலைதளங்களில் பலரும் கூறி வருகின்றனர். "சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டும் இல்லை என்றால் ருதுராஜ் கெய்க்வாட் யார் என்று இங்கே நிறைய பேருக்கு தெரிந்திருக்காது." என ஒருவர் ட்விட்டரில் குறிப்பிட்டு இருக்கிறார். வேறு ஒருவரோ, "இந்தியாவிலேயே அதிகம் பில்டப் கொடுக்கப்பட்ட வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தான். சிஎஸ்கே அணியால்தான் இப்போது ஒரு ரசிகர் அவரது காலில் விழுந்து வணங்கி இருக்கிறார்." என குறிப்பிட்டு இருக்கிறார்.
மற்றொருவரோ, "நானும் ருதுராஜ் கெய்க்வாட் ரசிகர் தான். ஆனால், அவரை சுற்றி இருக்கும் பில்டப்புகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் இன்னும் இந்திய கிரிக்கெட் அணியில் தனது இடத்தை பெறவில்லை. அதற்குள் ரசிகர்கள் அவரை வணங்குகிறார்கள். இதை என்னவென்று சொல்வது?" என குறிப்பிட்டு இருக்கிறார்.
மற்றொருவர், "ருதுராஜ் கெய்க்வாட் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. ஆனால், இது எல்லை மீறி செல்கிறது. அவர் தொடர்ந்து நன்றாக விளையாடினால் போதும்." என கூறி இருக்கிறார். துலீப் ட்ராபி தொடரில் இந்தியா சி அணியின் கேப்டனாக இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் முதல் இன்னிங்ஸில் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 48 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். இந்த சராசரியான செயல்பாடுகளால் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காது. எனவே, அவர் அடுத்து வரும் போட்டியில் சதம், இரட்டை சதம் என பெரிய அளவில் ரன் குவித்தால் மட்டுமே இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
இந்தியா டி அணி முதல் இன்னிங்ஸில் 164 ரன்கள் எடுத்தது. இந்தியா சி அணி தனது முதல் இன்னிங்ஸில் 168 ரன்கள் எடுத்தது. இந்தியா டி அணி இரண்டாவது இன்னிங்ஸில் 236 ரன்கள் குவித்தது. இந்தியா சி அணியின் வெற்றிக்கு 233 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.