டின்னர் சாப்பிட்டு முடிக்க முக்கால் மணி நேரம் லேட்.. அப்ரிடி உட்பட 8 பாக். வீரர்களுக்கு அபராதம்!
அடிலெய்டு: உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் இடம் பெற்றுள்ள அப்ரிடி உள்ளிட்ட 8 வீரர்களுக்கு ஒழுங்கீன குற்றத்திற்காக அணி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
உலக கோப்பை தொடரில் பங்கேற்க, மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அடிலெய்டில் நடைபெற உள்ள முதல் போட்டியில் பிப்ரவரி 15ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுடன், பாகிஸ்தான் மோதுகிறது.

டின்னர் அவுட்டிங்
இதனிடையே, சிட்னியில் பாகிஸ்தான் வீரர்கள் கடந்த சில நாட்களாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சியை முடித்து விட்டு இரவு வெளியே உள்ள ரெஸ்டாரண்டுகளுக்கு உணவு சாப்பிடுவதற்காக சில வீரர்கள் சென்றுள்ளனர்.

அப்ரிடிக்கு அபராதம்
ஆனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட 45 நிமிடம் தாமதமாக தங்கியிருந்த ஹோட்டலுக்கு அப்ரடி, தொடக்க பேட்ஸ்மேன் அகமது ஷெசாத் உள்ளிட்ட 8 வீரர்கள் வந்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு அணி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. 230 அமெரிக்க டாலர் அளவுக்கு இந்த அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.15 ஆயிரம்.

முதல் விமானத்தில் அனுப்புவதாக எச்சரிக்கை
இவர்கள் தங்கள் தவறுக்கு வருத்தம் தெரிவித்த போதும், அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. மீண்டும் ஒருமுறை இதுபோன்று தவறு செய்தால், ஆஸ்திரேலியாவில் இருந்து கிளம்பும் முதல் விமானத்தில், அந்தந்த வீரர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் அணி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சூதாட்டம் எதிரொலி
கடந்த 2010ல் லார்ட்ஸ் டெஸ்டில் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர் என, மூன்று வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு பிடிபட்ட பின், பாகிஸ்தான் அணி செல்லும் இடங்களில் வீரர்களுக்கு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அணி மேலாளராக உள்ள நவீது சீமா என்பவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications