ENG vs AUS: உலகக்கோப்பை நாயகன் செய்த செயல்.. கதி கலங்கிப் போன இங்கிலாந்து படுதோல்வி
நாட்டிங்ஹாம்: ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ட்ராவிஸ் ஹெட் 154 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்று ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார். இந்த சேஸிங் அப்படியே 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அடித்த அவரது சதத்தை நினைவுபடுத்தியது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நாட்டிங்ஹாம்-இல் நேற்று நடைபெற்றது. அதில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 49.4 ஓவர்களில் 315 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

ஆஸ்திரேலியா அணி சுழற் பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தி 9 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தது. இங்கிலாந்து மண்ணில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இதுவே முதல் முறை. ஆஸ்திரேலிய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் மேத்யூ ஷார்ட் 1 விக்கெட், ஆடம் ஜாம்பா 3 விக்கெட், மார்னஸ் லாபுசேன் 3 விக்கெட், ட்ராவிஸ் ஹெட் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 95 ரன்களும், வில் ஜாக்ஸ் 62 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் யாரும் 40 ரன்களை தாண்டவில்லை. அடுத்து 316 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி ஆடியது. அப்போது துவக்க வீரராக களம் இறங்கிய மிட்செல் மார்ஷ் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஸ்டீவ் ஸ்மித் 32 ரன்களிலும், கேமரான் கிரீன் 32 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
அதன் பின் ட்ராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லாபுஷேன் ஜோடி சேர்ந்தனர். 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டியை போலவே இவர்கள் இருவரும் கடைசி வரை களத்தில் இருந்து இங்கிலாந்து அணியை வீழ்த்தினர். டிராவிஸ் அதிரடியாக 129 பந்துகளில் 154 ரன்கள் சேர்த்தார். அவர் 20 ஃபோர் மற்றும் ஐந்து சிக்ஸ் அடித்து இருந்தார். லாபுஷேன் 61 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து இருந்தார். அவர் 7 ஃபோர் மற்றும் 2 சிக்ஸ் அடித்து இருந்தார்.
இதை அடுத்து ஆஸ்திரேலியா 44 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பல்வேறு சாதனைகளை முறியடித்தனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் அதிக ஸ்கோர் அடித்த ஆஸ்திரேலிய வீரர்களில் இரண்டாவது இடத்தை பிடித்தார் ட்ராவிஸ் ஹெட்.
முதல் இடத்தில் ஷேன் வாட்சன் 169 ரன்களுடன் இருக்கிறார். 154 ரன்கள் அடித்த டிராவிஸ் ஹெட் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார். மேலும், ஒரே ஒரு நாள் போட்டியில் அதிக ஃபோர் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தார் ட்ராவிஸ் ஹெட். அவர் 20 ஃபோர் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக டேவிட் வார்னர் 24 ஃபோர், கிளென் மேக்ஸ்வெல் 21 ஃபோர் அடித்து இருந்தனர். ஒரே போட்டியில் 50+ ரன்கள், 3 விக்கெட் மற்றும் 4 கேட்ச் பிடித்து இதற்கு முன் ஒருநாள் கிரிக்கெட்டில் எந்த ஒரு வீரரும் செய்யாத ஆல் - ரவுண்ட் சாதனையை செய்தார் மார்னஸ் லாபுஷேன்.


Click it and Unblock the Notifications