லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் ஏமாற்று வேலையில் ஈடுபட்டதாக இங்கிலாந்து ரசிகர்கள் கடுமையாக அவரை விமர்சனம் செய்தனர். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நான்காவது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த மைதானத்தில் 18 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஸ்டம்பிங் செய்த விவகாரத்தில் சர்ச்சை வெடித்தது. அது இரண்டு அணிகளுக்கும் இடையிலான பகையை மேலும் அதிகப்படுத்தி இருந்தது. அதன் பின் மீண்டும் அதே லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டு அணிகளும் மோதும் போட்டி என்பதால் ரசிகர்கள் நான்காவது ஒருநாள் போட்டியை காண ஆவலுடன் இருந்தனர்.

இந்த முறையும் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் ஒரு ஏமாற்று வேலையில் ஈடுபட்டு சிக்கினார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது 17வது ஓவரில் மிட்செல் ஸ்டார்க் பந்து வீசினார். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் பேட்டிங் செய்தார்.
அப்போது பந்து ப்ரூக்-இன் பேட்டில் எட்ஜ் ஆகி சென்றது. அதை பாய்ந்து சென்று பிடித்தார் ஜோஷ் இங்லிஸ். ஆனால், அவர் பந்தை பிடிக்கும் முன் பந்து தரையில் பட்டு இருந்தது. ஒருமுறை பிட்ச்சான பந்தை தான் ஜோஷ் இங்லிஸ் பிடித்தார். ஆனால், தான் கேட்ச் பிடித்ததாக அம்பயரிடம் அவுட் கேட்டார். பின்னர், இது சரியான கேட்ச் தானா? என அம்பயர் சரி பார்த்தார்.
அப்போது பந்து பவுன்ஸ் ஆனது தெரிய வந்தது. இதை அடுத்து ஜோஷ் இங்லிஸ் ஏமாற்று வேலையில் ஈடுபட்டதாக இங்கிலாந்து ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். ஆஸ்திரேலிய அணி தங்கள் ஏமாற்று வேலையை காட்டிவிட்டது என அவர்கள் இடைவிடாமல் கோஷம் எழுப்பினர். அதனால், போட்டியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பின்னர், இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 39 ஓவர்களில் 312 ரன்கள் சேர்த்தது. மழையால் இந்த போட்டியின் ஓவர்கள் குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து 39 ஓவர்களில் 313 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஆஸ்திரேலிய சேஸிங் செய்தது. ஆனால், அந்த அணி 24.4 ஓவர்களில் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பதிவு செய்தது.