தரம்சாலா : இங்கிலாந்து - வங்கதேசம் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் முஸ்தாபிசூர் ரஹ்மான் பந்து வீச வந்த போது இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜோ ரூட் திடீரென விலகினார். அதனால், முஸ்தாபிசூர் ரஹ்மான் தடுமாறி கீழே விழுந்து மோசமாக வலியில் துடித்தார். இதனால் போட்டியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. என்ன நடந்தது?

இங்கிலாந்து - வங்கதேசம் இடையே ஆன போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோ - டாவிட் மலன் துவக்கம் அளித்தனர்.
பேர்ஸ்டோ 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டாவிட் மலன் அதிரடி ஆட்டம் ஆடி சதம் கடந்தார். அவருக்கு ஜோ ரூட் ஒத்துழைப்பு அளித்து ஆடினார். 22வது ஓவர் முடிவுக்கு பின் வங்கதேச அணியின் வேகப் பந்துவீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மான் பந்து வீச வந்தார்.
அப்போது ஜோ ரூட் பேட்டிங் ஆட நின்று இருந்தார். ரஹ்மான் சரியாக எதிர்முனை கிரீஸை அடைந்த அந்த நொடியில், ஜோ ரூட் பேட்டிங் நின்ற இடத்தில் இருந்து விலகினார். அதாவது தான் பேட்டிங் ஆட தயாராகவில்லை என்பதை குறிக்கும் விதமாக அவர் அப்படி விலகினார்.
ஆனாலும், பந்துவீச்சாளர் பாதி தூரம் ஓடி வரும் போதோ, அம்பயர் அருகே வந்து கொண்டிருக்கும் போதோ விலகுவது தான் வாடிக்கை. ஆனால், ஜோ ரூட் கடைசி நொடியில் விலகினார்.

இதை எதிர்பார்க்காத ரஹ்மான் பந்தை வீசினால் ஜோ ரூட் மீது பட்டுவிடுமோ எனக் கருதி தன் ஓட்டத்தை குறைக்க முயன்று கீழே தடுமாறி விழுந்தார். காலில் அவருக்கு லேசாக அடிபட்டது. பின் வலியால் அவர் துடித்தார்.
பின்னர் வங்கதேச அணியின் பிசியோதெரபிஸ்ட் அவரை பரிசோதித்து வலி நீங்க மருந்தை பயன்படுத்தினார். அதன் பின் முஸ்தாபிசூர் ரஹ்மான் மீண்டும் பந்து வீசத் துவங்கினார். லேசாக காலை தூக்கி, தூக்கி வைத்தே அடுத்த பந்தை வீசினார். அதன் பின் சரியாக வீசத் துவங்கினார்.
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் செய்தது தவறு என வங்கதேச ரசிகர்கள் கூறி வருகின்றனர். அவர் மீது விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். இந்தப் போட்டியில் ஜோ ரூட் 82 ரன்கள் குவித்தார். முஸ்தாபிசூர் ரஹ்மான் மோசமாக பந்து வீசி 10 ஓவர்களில் 70 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 364 ரன்கள் குவித்தது.