எல்லாரும் அடிச்சா எப்படி... அட்டகாசம் செய்த பண்ட்;ராகுல் அதிரடி சதம்..இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு!
புனே: இந்திய அணியின் டாப் கியர் ஆட்டத்தால் 2வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் 1 -0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில் 2வது ஒருநாள் போட்டி இன்று புனேவில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கே.எல்.ராகுல், கோலி, ரிஷப் பண்ட் ஆகியோரின் அதிரடியால் இங்கிலாந்துக்கு 337 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பேட்டிங்
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக வெளியேறியதால் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஒருநாள் போட்டியில் 98 ரன்கள் அடித்து கெத்து காட்டிய ஷிகர் தவான் இப்போட்டியில் 4 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவும் 24 ரன்களுக்கு வெளியேறினார்.

மீண்ட இந்தியா
இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி - கே.எல்.ராகுல் ஜோடி முதலில் நிதானமாக ஆடி அணியை மீட்டுக் கொண்டு வந்தனர். பின்னர் களத்தில் செட்டில் ஆன இருவரும் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். சிறப்பாக ஆடிய கேப்டன் விராட் கோலி 79 பந்துகளில் 66 ரன்களை எடுத்து அவுட்டானார். இது சர்வதேச போட்டிகளில் அவர் அடிக்கும் 62வது அரை சதம் ஆகும். எனினும் அவர் சதமடிக்காதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமளித்தது.

அதிரடி இணை
பின்னர் களமிறங்கிய இளம் வீரர் ரிஷப் பண்ட் வழக்கம் போல் தொடக்கத்தில் இருந்தே இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவருடன் மறுபக்கத்தில் இருந்த கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தால் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தனது 5வது சதத்தை விளாசினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்த நிலையில் கே.எல்.ராகுல் 108 ரன்கள் எடுத்திருந்த போது டாம் கரண் பந்துவீச்சில் அவுட்டானார்.

அடங்காத ரிஷப் பண்ட்
ஒரு புறம் விக்கெட்கள் சரிந்தாலும் தனது அட்டகாசத்தை நிறுத்தாத ரிஷப் பண்ட் இங்கிலாந்து பவுலர்களுக்கு தலைவலி கொடுத்தார். பின்னர் இவரும் டாம் கரண் பந்துவீச்சிலேயே அவுட்டானார். இவர் 40 பந்துகளில் 77 ரன்களை விளாசினார். இதில் 7 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். இதனையடுத்து களமிறங்கிய ஹர்த்திக் பாண்டியா (35), க்ருணால் பாண்டியா (12*) ஆகியோர் ரன் குவிக்க 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது.


Click it and Unblock the Notifications