
4வது டி20 போட்டி
இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரில் இங்கிலாந்து 2 -1 என முன்னிலை வகிக்கிறது. இதனால் இந்திய அணிக்கு வாழ்வா சாவா என்ற கட்டத்தில் 4வது டி20 போட்டி இன்று தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 12 ரன்களுக்கு ஆர்ச்சர் பந்தில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

அதிரடி
பின்னர் கே.எல்.ராகுல் 14 ரன்னுக்கும், விராட் கோலி 1 ரன்னுக்கு வெளியேறினர். அடுத்தடுத்து விக்கெட்களை இழ்ந்து தடுமாறிய போது மறு முனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 57 ரன்களை விளாசினார். இது சர்வதேச போட்டியில் அவர் அடிக்கும் முதல் அரை சதமாகும். பின்னர் பண்ட், ஸ்ரேயாஸ் ஆகியோர் மட்டும் ஓரளவிற்கு அணியின் ஸ்கோரை உயர்த்த மற்றவர்கள் வந்த வேகத்தில் திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்தது.

நல்ல தொடக்கம்
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் நல்ல தொடக்கம் அளித்தார். ஆனால் அவருக்கு பார்ட்னர்ஷிப் அமையாதது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக போனது. தொடக்க வீரர் பட்லர் 9 ரன்களும், மாலன் 14, பேர்ஸ்டோ 25 ரன்களும் எடுத்து வெளியேறினர். தனி ஆளாக தொடக்கத்தில் இருந்து போராடிய ராய், 27 பந்துகளில் 40 ரன்களை விளாசினார்.

விறுவிறுப்பு
பின்னர் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் பந்தை மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிதறடித்தார். ஒரு கட்டத்தில் ஸ்டோக்ஸின் ஆட்டத்தால் இங்கிலாந்து அணி எளிதாக வென்றுவிடும் என்று சென்றது. ஆனால் ஷர்துல் தாக்கூரின் சாதூர்யத்தால் ஸ்டோக்ஸ் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவருக்கு பின்னால் வந்தவர்கள் அடுத்தடுத்து சரிய இறுதியில் 2 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. ஆனால் சிறப்பாக பந்துவீசிய ஷர்துலால் இங்கிலாந்து அணி 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 2 -2 என சமநிலை பெற்றது.


Click it and Unblock the Notifications