
இங்கிலாந்து தொடர்
இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக வரும் மார்ச் 23ம் தேதி முதல் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக தமிழக வீரர் டி.நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பும்ரா
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்த பும்ரா, தனது திருமணத்திற்காக டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் இருந்து விலகினார். அவர் தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேஷனை திருமணம் செய்து கொண்டார். இதனால் அவரின் இடத்தை ஷர்துல் தாக்கூர் நிரப்பி வருகிறார். இந்நிலையில் ஒருநாள் போட்டியில் யார்க்கர் நடராஜனுக்கு அந்த பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசத்தல்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் வலைப்பந்து வீச்சாளராக சென்ற டி நடராஜன், சில வீரர்கள் காயம் அடைந்ததால், மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமானார். அதில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகக் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட அவர், அனைவரின் கவனத்தையும் பெற்றார். இதனால் அவருக்கு இங்கிலாந்து டி20 தொடரிலும் ஆட வாய்ப்பு வழங்கப்பட்டது.

உடற்தகுதி
எனினும் ஆஸ்திரேலிய தொடரின் போது நடராஜனுக்கு ஏற்பட்ட தோள்பட்டை, முழங்கால் காயத்தால், அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஓய்வில் இருந்தார். இதனால் 4 டி20 போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவர், பிசிசிஐயின் யோ யோ டெஸ்டில் தேர்ச்சியடைந்து, முழு உடற்தகுதியுடன் தற்போது இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். எனவே அவரால் ஒரு நாள் போட்டியில் பெரிய சம்பவங்களை பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











