இங்கிலாந்து சாதனை வெற்றி.. ஏனோ தானோ ஆட்டம் ஆடி தோற்றது நியூசிலாந்து!
செஸ்டர் லீ ஸ்ட்ரீட் : இங்கிலாந்து அணி முக்கியமான உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
நியூசிலாந்து அணி பேட்டிங்கில் பல இடங்களில் கோட்டை விட்டு, தானாகவே படு தோல்வி அடைந்தது.
இங்கிலாந்து அணிக்கு இந்தப் போட்டியில் கிடைத்த வெற்றி சாதனை வெற்றி ஆகும். 1992க்குப் பின் இங்கிலாந்து அணி முதல் முறையாக உலகக்கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. மேலும், 1983க்குப் பின் நியூசிலாந்து அணியை உலகக்கோப்பை தொடரில் வீழ்த்தி இருக்கிறது.

அசத்தல் துவக்கம்
இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ அபார துவக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்தனர். ராய் 60, பேர்ஸ்டோ 106 ரன்கள் எடுத்தனர். பேர்ஸ்டோ தொடர்ந்து இரண்டாவது உலகக்கோப்பை போட்டியில் சதம் அடித்தார்.

இங்கிலாந்து ரன் குவிப்பு
நியூசிலாந்து அணி கடைசி 20 ஓவர்களில் சிறப்பாக பந்து வீசியது. அதை சமாளித்து ரன் குவித்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் மட்டுமே எடுத்தது. 350 ரன்கள் எடுப்பது போல ஆடி வந்த இங்கிலாந்து அணியை 305 ரன்களுக்குள் சுருக்கியது நியூசிலாந்து.

நியூசிலாந்து சொதப்பல்
அடுத்து சேஸிங் செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர்கள் ஹென்றி நிக்கோல்ஸ் 0, மார்டின் குப்டில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். எப்போதும் பொறுப்பாக ஆடும் கேன் வில்லியம்சன் துரதிர்ஷ்டவசமாக, ராஸ் டெய்லர் அடித்த பந்து ஸ்டம்பில் பட்டு ரன் அவுட் ஆனார். அடுத்து ராஸ் டெய்லர் தேவையே இல்லாமல் ரன் ஓடி ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்து படுதோல்வி
அதன் பின் டாம் லாதம் அரைசதம் அடித்து தனியாக போராடினாலும், மற்ற பேட்ஸ்மேன்கள் கைவிட்டனர், நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து 119 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பெரிய அளவில் வெற்றி பெற்றது.

வாய்ப்பு யாருக்கு?
இங்கிலாந்து அணி இந்த வெற்றி மூலம் 12 புள்ளிகள் பெற்று, உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு மூன்றாவது அணியாக முன்னேறியது. நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தாலும், பாகிஸ்தான் அணியின் நெட் ரன் ரேட்டை விட அதிகமாக இருப்பதால், நியூசிலாந்து அணியும் அரையிறுதி முன்னேறி விடும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications