"செக்ஸி கேமல்".. ரசிகர்கள் செய்த செயல்.. மைதானத்தில் ஒட்டகம்.. டிம் சவுத்திக்காக குவிந்த ரசிகர்கள்
ஹாமில்டன்: நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான டிம் சவுத்தி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருக்கிறார். அவரது சொந்த ஊரான ஹாமில்டனில் மூன்றாவது போட்டி நடந்து வரும் நிலையில் அவருக்கு விடை கொடுக்க பெருமளவில் ரசிகர்கள் கூடி உள்ளனர்.
இதில் வேடிக்கையாக ஒரு விஷயமும் நடந்துள்ளது. டிம் சவுத்தியை கவுரவிக்கும் வகையில் ஒட்டக பொம்மையை மைதானத்தில் வைத்துள்ளனர் ரசிகர்கள். சில ரசிகர்கள் ஒட்டகத்தின் புகைப்படம் பொறித்த உடையை அணிந்து மைதானத்திற்கு வந்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

டிம் சவுத்தி உயரமானவர் என்பதோடு, அவர் ஓடிவரும் முறை வித்தியாசமாக இருப்பதால் அவருக்கு "செக்ஸி கேமல்" (Sexy Camel - கவர்ச்சியான ஒட்டகம்) என்ற பெயர் நியூசிலாந்து ரசிகர்கள் மத்தியில் வழங்கப்பட்டுள்ளது. அதை நினைவுகூரும் வகையில் தான் அவரது கடைசி டெஸ்ட் போட்டியில் ஒட்டக பொம்மையையும், ஒட்டகத்தின் புகைப்படம் பொறித்த உடையையும் ரசிகர்கள் அணிந்து வந்துள்ளனர்.
மைதானத்தில் சுமார் 6 அடி உயரம் உள்ள ஒட்டக பொம்மை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொப்பியை அணிவித்து உள்ளனர். அந்த பொம்மையுடன் ரசிகர்கள் பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது டிம் சவுத்தி பத்தாம் வரிசையில் இறங்கி அதிரடி ஆட்டம் ஆடினார். அவருக்கு இங்கிலாந்து வீரர்கள் "கார்டு ஆஃப் ஹானர்" என்ற மரியாதையை அளித்தனர்.
டிம் சவுத்தி 10 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார். ஒரு ஃபோர் மற்றும் மூன்று சிக்ஸ் அடித்தார். 230 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்து இங்கிலாந்து அணியை மிரள வைத்தார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 347 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மாட் ஹென்றி 4 விக்கெட்களையும், வில்லியம் ஓ-ரூர்க் மற்றும் மிட்செல் சான்ட்னர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். டிம் சவுத்தி விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.


Click it and Unblock the Notifications