RSA vs ENG: 400 ரன்கள் இலக்கு.. வான வேடிக்கை காட்டிய கிளாஸன்.. கண்ணீரில் இங்கிலாந்து பவுலர்கள்!
மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெறுவதற்கு 400 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை தொடரின் 20வது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் டி காக் - ஹென்ரிக்ஸ் கூட்டணி களமிறங்கியது. அதில் டி காக் 2வது பந்திலேயே 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஹென்ரிக்ஸ் - வான் டர் டஸன் கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் நிதானமாக ரன்கள் சேர்த்து, பின்னர் அதிரடிக்கு திரும்பினர்.

சிறப்பாக ஆடிய டஸன் 49 பந்துகளில் அரைசதம் அடிக்க, ஹென்ரிக்ஸ் 48 பந்துகளில் அரைசதம் அடித்தார். இவர்களின் பார்ட்னர்ஷிப் 121 ரன்கள் அமைக்கப்பட்ட நிலையில், வான் டர் டஸன் 60 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மறுபக்கம் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹென்ரிக்ஸ் 75 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்குஇ 164 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த கிளாஸன் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாச, மார்க்ரம் 42 ரன்களிலும், தொடர்ந்து வந்த டேவிட் மில்லர் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
சுமார் 14 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் பேட்டிங்கை சிறப்பாக முடித்து கொடுக்கும் பொறுப்பு கிளாஸன் கைகளுக்கு வந்தது. இதனை உணர்ந்து 42 ஓவர்கள் வரை அரைசதம் கடந்தும் நிதானம் காட்டினார் கிளாஸன். ஆனால் அதன்பின்னர் ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரியும், சிக்சருமாய் பறந்து கொண்டே இருந்தது. குறிப்பாக 44வது ஓவரை வீசிய டாப்லீ பந்துவீச்சில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் என்று 19 ரன்கள் விளாசப்பட்டது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 300 ரன்களையும் கடந்து அசத்தியது.
இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி முதல் பேட்டிங் ஆடிய போது தொடர்ச்சியாக 6வது முறை 300 ரன்களை கடந்த அணி என்ற சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து டேவிட் வில்லி வீசிய 46வது ஓவரில் 18 ரன்கள் விளாசப்பட்டது. அதன்பின் மார்க் வுட் வீசிய ஓவரில் பவுண்டரியை விளாசி 61 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் கிளாஸன். இதுமட்டுமல்லாமல் மார்கோ யான்சன் 35 பந்துகளில் அரைசதம் அடிக்க, மும்பை ரசிகர்களின் கரகோஷம் விண்ணை தொட்டது.
தொடர்ந்து கடைசி ஓவரின் முதல் பந்தில் கிளாஸன் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கொயட்சே 3 ரன்களில் வெளியேறினார். இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்களை விளாசியது. சிறப்பாக ஆடிய யான்சன் 42 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழந்தார்.


Click it and Unblock the Notifications