மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரை 1-1 என சமன் செய்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் காட்டடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் திணறினர்.
குறிப்பாக, அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களான ககிசோ ரபாடா, லிசாட் வில்லியம்ஸ் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் இணைந்து டி20 வரலாற்றிலேயே மோசமான உலக சாதனையைப் படைத்துள்ளனர்.

மான்செஸ்டரில் நடந்த இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, பில் சால்ட்டின் (141* ரன்கள்) வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி சதம் மற்றும் ஜோஸ் பட்லரின் (83 ரன்கள்) அதிரடியால், 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இது டி20 வரலாற்றில் ஒரு முழு உறுப்பினர் அணிக்கு எதிரான அதிகபட்ச ஸ்கோராகும்.
இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் சரணடைந்தனர். குறிப்பாக, அந்த அணியின் வேகப்பந்து மூவர் கூட்டணி ரன்களை வாரி வழங்கியது. ககிசோ ரபாடா 4 ஓவர்களில் விக்கெட் ஏதும் எடுக்காமல் 70 ரன்கள் கொடுத்தார். லிசாட் வில்லியம்ஸ் 3 ஓவர்களில் 62 ரன்களை விட்டுக்கொடுத்தார். மார்கோ ஜான்சன் 4 ஓவர்களில் 60 ரன்களைக் கொடுத்தார்.
இந்த போட்டியின் மூலம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் ஒரு அணியின் மூன்று பந்துவீச்சாளர்கள் தலா 60 ரன்களுக்கு மேல் கொடுத்தது இதுவே முதல் முறையாகும். இந்த மோசமான உலக சாதனையை தென்னாப்பிரிக்க வேகப்பந்து மூவர் கூட்டணி பதிவு செய்துள்ளது.
மேலும், ககிசோ ரபாடா 4 ஓவர்களில் 70 ரன்கள் கொடுத்ததன் மூலம், தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் ஒருவர் டி20 போட்டியில் கொடுத்த அதிகபட்ச ரன்கள் என்ற மோசமான சாதனையையும் படைத்தார். இந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருக்கு இது ஒரு மறக்க முடியாத மோசமான நாளாக அமைந்தது.
305 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்க அணி, ஆரம்பம் முதலே தடுமாறியது. அந்த அணி 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இது டி20 போட்டிகளில் இங்கிலாந்து பெற்ற மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகும்.