மான்செஸ்டர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.
3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்க அணி முதல் போட்டியில் வென்ற நிலையில், இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் களமிறங்கியது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் டீன் எல்கார் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சாரெல் எர்வீ 3 ரன்களில் ஆட்டமிழக்க, பொறுப்புடன் விளையாடிய பீட்டர்சன் 21 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்த வீரர்கள் பெவிலியன் திரும்பினர். நட்சத்திர வீரர்கள் ஆண்டர்சன், பிராடு கூட்டணி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரபாடா மட்டும் அதிகபட்சமாக 36 ரன்கள் சேர்க்க, தென்னாப்பிரிக்க அணி 151 ரன்களுக்கு சுருண்டது.
இதனையடுத்து. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது அலெக்ஸ் லீஸ் 4 ரன்களிலும், ஜோ ரூட் 9 ரன்களிலும், ஜாக் கிராலி 38 ரன்களிலும் ஆட்டமிழக்க, போப் 23 ரன்களில் போல்ட் ஆனார். இதனையடுத்து இங்கிலாந்து அணி தடுமாற, களத்துக்கு வந்த பென் ஸ்டோக்ஸ், தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனையடுத்து டெஸ்ட் கேப்டனாக தனது முதல் சதத்தை பென் ஸ்டோக்ஸ் பூர்த்தி செய்து 103 ரன்களில் ஆட்டமிழந்தது. இதே போன்று விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் பொறுப்புடன் விளையாடி முதல் சதத்தை விளாச, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களை கடந்தது. இன்னும் 3 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், இங்கிலாந்தின் வெற்றி உறுதியாகி உள்ளது