ENG vs SA: தென்னாப்பிரிக்காவை அரண்டு போக வைத்த 21 வயது ஜேக்கப்.. 76 பந்தில் மெய்டன் செஞ்சுரி
சவுத்தாம்ப்டன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்தின் இளம் அதிரடி வீரர் ஜேக்கப் பெத்தெல் தனது முதல் சர்வதேச சதத்தை விளாசி கிரிக்கெட் உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார். ஏற்கனவே, இந்த தொடரை 2-0 என இழந்திருந்த இங்கிலாந்து அணிக்கு, பெத்தேலின் இந்த அபார ஆட்டம் நம்பிக்கை அளித்தது.
.
சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான பென் டக்கெட் (31) மற்றும் ஜேமி ஸ்மித் (59) சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய 21 வயதான ஜேக்கப் பெத்தெல், அனுபவ வீரர் ஜோ ரூட்டுடன் இணைந்து இங்கிலாந்தின் இன்னிங்ஸை வலுப்படுத்தினார்.

பெத்தேலின் சாதனை சதம்
ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஜேக்கப் பெத்தெல், தென்னாப்பிரிக்க பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 76 பந்துகளில் தனது முதல் ஒருநாள் சதத்தை எட்டியபோது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி அவரைப் பாராட்டினர். இந்தச் சதம் மூலம் பல சாதனைகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்தின் இரண்டாவது இளம் வீரர் அடித்த சதம்:
ஜேக்கப் பெத்தேல் தனது 21 வயது மற்றும் 319 நாட்களில் ஒருநாள் சதமடித்ததன் மூலம், இங்கிலாந்துக்காக இளம் வயதில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு டேவிட் கோவர் 21 வயது மற்றும் 55 நாட்களில் சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
இயான் மார்கனின் சாதனையை முறியடித்தார்:
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நான்காவது வீரராகக் களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஜேக்கப் பெத்தெல் படைத்துள்ளார். இதற்கு முன்பு முன்னாள் கேப்டன் இயான் மார்கன் 107 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
ஜேக்கப் பெத்தெல் மொத்தம் 82 பந்துகளைச் சந்தித்து 110 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய ஜோ ரூட் சதம் அடித்து அவருக்குச் சிறந்த ஒத்துழைப்பு அளித்தார். இவர்களின் அபார ஆட்டத்தால், இங்கிலாந்து அணி 47 ஓவர்களில் 372 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இருந்தது.
ரசிகர்களின் ஆரவாரம்
ஜேக்கப் பெத்தெல் சதம் அடித்தபோது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடினர். தனது ஹெல்மெட்டைக் கழற்றி, பேட்டை உயர்த்தி ரசிகர்களின் பாராட்டுகளை ஏற்றுக்கொண்டார். ஜோ ரூட் அவரைக் கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், ஜேக்கப் பெத்தேல் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஆடுகளத்தை விட்டு சென்ற போது ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி, அவருக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications