மான்செஸ்டர்: சர்வதேச t20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி ஒரே இன்னிங்சில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 304 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக 300 ரன்கள் அடிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது t20 போட்டி மான்செஸ்டர் நகரில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் தங்கள் வாழ்நாளில் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை விளையாடினர். தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை மைதானத்தில் நான்கு பக்கமும் சிதறடித்தனர். இதனால் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.
குறிப்பாக பில் சால்ட்டை கட்டுப்படுத்த முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் தடுமாறினர். இங்கிலாந்து அணி பவர்பிளே முடிவில் எல்லாம் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை எடுத்தது. பில் சால்ட் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஜாஸ் பட்லர் 18 பந்துகளில் அரை சதம் அடித்தார். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அடித்தனர்.
ஒரு கட்டத்தில் இருவரில் யார் முதலில் சதம் அடிக்கப் போகிறார்கள் என்ற பந்தயம் உருவானது. அதிரடி காட்டிய பில் சால்ட் 39 பந்துகளில் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். அப்போது அவர் 13 பவுண்டரியும், 5 சிக்சரும் அடித்திருந்தார். இன்னும் சொல்லப்போனால் இங்கிலாந்து அணி 10 ஓவரில் எல்லாம் 166 ரன்கள் குவித்திருந்தது. இது சர்வதேச டி20 போட்டியில் 10 ஓவர்களில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜாஸ் பட்லர் 30 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து பெவிலின் திரும்பினார். இதில் எட்டு பௌண்டரிகளும்,ஏழு சிக்ஸர்களும் அடங்கும். இந்த நிலையில் ஜேக்கப் போத்தேல், 14 பந்துகளில் 26 ரன்களில் ஆட்டம் இழக்க பில் சால்ட் தொடர்ந்து அதிரடி காட்டினார். இறுதியில் கேப்டன் ஹாரி புரூக் 21 பந்துகளில் 41 ரன்கள் எடுக்க பில் சால்ட் கடைசி வரை ஆட்டமிழல்லாமல் 60 பந்துகளில் 141 ரன்கள் எடுத்தார்.
இதில் 15 பவுண்டர்களும், 8 சிக்ஸர்களும் அடங்கும். இங்கிலாந்து அணி 300 ரன்கள் கடைசி ஓவரில் கடந்த போது ஒட்டுமொத்த ரசிகர்களும் மைதானத்தில் எழுந்து கைதட்டி உற்சாகப்படுத்தினர். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்திருக்கிறது. சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணிக்கு எதுவும் சரியாக அமையவில்லை.
தொடக்கத்தில் 3.4 ஓவர்கள் எல்லாம் தென்னாபிரிக்க அணி 50 ரன்கள் எட்டியது. ஆனால் அதன் பிறகு விக்கெட்டுகள் சீரான இடைவேளையில் விழுந்தது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா 16 புள்ளி ஒரு ஓவரில் 158 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஏய்டன் மார்க்கரம் 20 பந்துகளில் 41 ரன்கள் மற்றும் பிஜான் போர்டின் 14 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.
சிஎஸ்கே வீரர் பிரவீஸ் 3 பந்துகளில் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமன்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டி நாளை செப்டம்பர் 14ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரு டெஸ்ட் அணிகள் மோதிய ஆட்டத்தில் 300 ரன்கள் ஒரே இன்னிங்சில் அடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.