கராச்சி: 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்க உள்ள போட்டி அரையிறுதிக்கு முன்னேற உள்ள நான்காவது அணி எது என்பதை தீர்மானிக்கும் போட்டியாக அமைய உள்ளது. தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறுவது 90 சதவீதம் உறுதியாக உள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மழை பெய்தால் தென்னாப்பிரிக்கா அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியுமா என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

தற்போது உள்ள சூழ்நிலையில், குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா 3 புள்ளிகளுடன் உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டால், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அப்போது, தென்னாப்பிரிக்கா அணி நான்கு புள்ளிகளுடன் இருக்கும்.
ஏற்கனவே, குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியாவும் நான்கு புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி மூன்று புள்ளிகள் மட்டுமே பெற்று இருக்கிறது. எனவே, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டால் தென்னாப்பிரிக்கா அணி நான்கு புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் முதல் இடத்தை பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெறும்.
ஏனெனில், ஆஸ்திரேலியா அணி நான்கு புள்ளிகள் பெற்று இருந்தாலும், நெட் ரன் ரேட் குறைவாக உள்ளது. தென்னாப்பிரிக்கா அணியின் நெட் ரன் ரேட் அதிகமாக உள்ளது. எனவே, அந்த குரூப்பில் தென்னாப்பிரிக்கா நான்கு புள்ளிகளை மட்டும் பெற்றாலும் முதல் இடத்தை பெறும்.
ஆனால், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ள கராச்சி மைதானத்தில். மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என வானிலை அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. எனவே, இந்த போட்டி முழுமையாக நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி நம்ப முடியாத வகையில் தோல்வி அடைந்தால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை இழக்கும். உதாரணத்திற்கு, தென்னாப்பிரிக்க அணி 301 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடும்போது, 207 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் அரையிறுதி வாய்ப்பை இழக்கும்.
ஆனால், அது போன்ற இமாலய தோல்விகளை தென்னாப்பிரிக்கா சந்திக்காது என்ற கணிப்பு இருப்பதால், அந்த அணி இங்கிலாந்துக்கு எதிராக தோல்வி அடைந்தாலும் மூன்று புள்ளிகளுடன் அதிக நெட் ரன் ரேட் மூலம் ஆப்கானிஸ்தானை முந்தி அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கலாம். தற்போது தென்னாப்பிரிக்காவின் நெட் ரன் ரேட் +2.14 என்பதாகவும், ஆப்கானிஸ்தானின் நெட் ரன் ரேட் -0.99 என்பதாகவும் உள்ளது.