லண்டன் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் அபாரமாக விளையாடி 143 ரன்கள் குவித்தார். இதேபோன்று கீழ் வரிசையில் களமிறங்கிய அட்கின்சன் 118 ரன்கள் குவித்தார்.

இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 427 ரன்கள் குவித்தது. இதை அடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்சில் விளையாடியது. இதில் மது ஷங்கா,கருணரத்னா நிஷாங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். கேப்டன் தனஞ்செய் டி செல்வா டக் அவுட் ஆனார். இறுதியில் கமிண்டூ மெண்டீஸ் மட்டும் பொறுப்புடன் விளையாடி 74 ரன்கள் சேர்க்க இலங்கை அணி முதல் இன்னிங்சில் 196 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
231 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. இதில் ஜோ ரூட் மீண்டும் சதம் அடித்து அசத்தினார். இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 251 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து 483 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கியது. இதிலும் இலங்கை அணியின் முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க மேத்யூஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் போராடி அணியை காப்பாற்ற முயற்சித்தனர்.
மேத்யூஸ் 36 ரன்களிலும் தினேஷ் சந்திமால் 58 ரன்களிலும் ஆட்டமிழக்க கேப்டன் தனஜெய டி சில்வா 50 ரன்கள் எடுத்தார். இறுதியில் மிலன் ரத்தின நாயக்கே 43 ரன்கள் எடுக்க இலங்கை அணி 292 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த டெஸ்ட் போட்டிகள் சதம் விளாசிய அட்கின்சன் பந்துவீச்சிலும் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.