லண்டன்: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஒல்லி போப் சதம் அடித்து பல்வேறு சாதனைகளை உடைத்து இருக்கிறார். டெஸ்ட் வரலாற்றிலேயே யாரும் செய்யாத விசித்திரமான சாதனையை அவர் செய்து இருக்கிறார். இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் டான் லாரன்ஸ் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பின் பென் டக்கெட் மற்றும் ஒல்லி போப் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். பென் டக்கெட் 86 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்து வெளியேறினார். அவர் அதிரடியாக ஆடி 79 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்திருந்தார். 9 ஃபோர் மற்றும் 2 சிக்ஸ் அடித்து இருந்தார்.

மறுபுறம் ஒல்லி போப்பும் அதிரடி ஆட்டத்தை ஆடினார். அவர் முதல் நாள் முடிவில் 103 பந்துகளுக்கு 103 ரன்கள் எடுத்திருந்தார். 13 ஃபோர் மற்றும் 2 சிக்ஸ் அடித்து இருந்தார். இது அவரது ஏழாவது டெஸ்ட் சதம் ஆகும். இதன் மூலம் அவர் ஏழு அணிகளுக்கு எதிராக ஏழு சதங்களை அடித்து இருக்கிறார்.
ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் ஒரு சதம் என்ற அடிப்படையில் தனது முதல் ஏழு சதங்களையும் ஏழு வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்து அவர் சாதனை செய்துள்ளார். இதற்கு முன் கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் இப்படி ஒரு விசித்திரமான சாதனையை செய்தது இல்லை. 2020 ஆம் ஆண்டு ஒல்லி போப் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்து இருந்தார்.
அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக 2022 இல் ஒரு சதம் அடித்தார். தொடர்ந்து பாகிஸ்தான், அயர்லாந்து, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக சதங்களை அடித்து இருந்தார். தற்போது இலங்கை அணிக்கு எதிராக தனது ஏழாவது சதத்தை அடித்து இருக்கிறார். இந்த போட்டிக்கு முன்னதாக ஒல்லி போப்பின் தனிப்பட்ட பேட்டிங் மற்றும் கேப்டன்சி குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார் முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாகன்.
அந்த விமர்சனத்திற்கு ஒல்லி போப் தனது சதம் மூலம் பதிலடி அளித்து இருக்கிறார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்து இருந்தது. கடந்த இரண்டு போட்டிகளிலும் சதம் அடித்த மூத்த வீரர் ஜோ ரூட் 13 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். தற்போது ஒல்லி போப் 103 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முதல் நாள் ஆட்டம் வெளிச்சமின்மை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. வெறும் 44 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் முதல் வெளிச்சமின்மை காரணமாக போட்டி தடைபட்டது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து அணி தங்களுக்கு சாதகமான சூழ்நிலை இல்லை என்பதால் வெளிச்சத்தை காரணம் காட்டி தப்பித்து இருப்பதாக முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.