லண்டன்: இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசி இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 34 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையையும் ஜோ ரூட் செய்துள்ளார். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசிய 9வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
அதேபோல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் பிரையன் லாராவை முந்தி 7வது இடத்தில் இருக்கிறார். இதுவரை மொத்தமாக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 34 சதங்கள், 64 அரைசதங்கள் உட்பட 12,377 ரன்களை விளாசியுள்ளார்.

இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு பின் 13,378 ரன்களுடன் ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் 2வது இடத்திலும், தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் காலிஸ் 13,289 ரன்களுடன் 3வது இடத்திலும், இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட் 13,288 ரன்களுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.
தொடர்ந்து இங்கிலாந்து ஜாம்பவான் அலஸ்டைர் குக் 12,472 ரன்களுடன் 5வது இடத்திலும், இலங்கை ஜாம்பவான் சங்கக்காரா 12,400 ரன்களுடன் 6வது இடத்திலும் இருக்கின்றனர். இதில் குக் மற்றும் சங்கக்காரா இருவரையும் ஜோ ரூட்டால் இன்னும் ஒரு சில போட்டிகளிலேயே முந்தி செல்ல முடியும். இதனால் அதிக ரன்கள் விளாசிய வீரர்களில் டாப் 5 இடங்களுக்குள் ஜோ ரூட் எளிதாக பிடிக்க முடியும்.
அதுமட்டுமல்லாமல் முதலிடத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜோ ரூட் இடையிலான வித்தியாசம் வெறும் 3,544 ரன்கள் மட்டும் தான். 33 வயதாகும் ஜோ ரூட் இன்னும் 4 ஆண்டுகள் தாராளமான டெஸ்ட் கிரிக்கெட்டில் நீடிக்க முடியும் என்பதால், சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடிக்க வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க கிடைத்துள்ள வாய்ப்பு குறித்து ஜோ ரூட் பேசுகையில், நான் எனது அணியின் வெற்றிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவிக்க விரும்புகிறேன். நிச்சயம் ஒவ்வொரு முறையும் சதம் விளாசும் போது மகிழ்ச்சியாக உள்ளது. அது இல்லை என்று சொன்னால், பொய் சொல்கிறேன் என்பதே அர்த்தம்.
இந்த கிரிக்கெட்டை விளையாட ஆரம்ப புள்ளியே அதுதான். ஆனால் சதம் விளாசுவதை விடவும் சிறந்த உணர்வு என்னவென்றால், ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறுவது தான். அதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்காக அதிக சதங்களை விளாச வேண்டும் என்று விரும்புகிறேன். இதேபோல் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்பது தான் ஆசை.
இதனை சரியாக செய்தாலே, சாதனைகள் நம்மை பின் தொடரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்து அணி ஆண்டுக்கு 25 டெஸ்ட் போட்டிகள் வரை விளையாடி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜோ ரூட் நல்ல ஃபிட்னஸ் உடன் இருப்பதால், அடுத்த 3 ஆண்டுகள் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்று பார்க்கப்படுகிறது. இதனால் சச்சினின் அதிக ரன்கள் சாதனை மட்டுமல்லாமல், அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையையும் முறியடிக்க வாய்ப்புகள் உள்ளது.