லண்டன்: சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது 33 ஆவது சதத்தை அடித்து பல்வேறு சாதனைகளை உடைத்து எறிந்து இருக்கிறார் இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜோ ரூட். தற்போது டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் நான்கு சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கும் ஜோ ரூட், மற்ற மூவரான ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை மிஞ்சும் வகையில் பல்வேறு டெஸ்ட் சாதனைகளை படைத்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 88 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது. இதில் ஜோ ரூட் 206 பந்துகளில் 143 ரன்கள் எடுத்து தனது 33 ஆவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்து ஆட்டம் இழந்தார்.

அவர் அடித்த சதத்தின் மூலம் என்னென்ன சாதனைகளை செய்து இருக்கிறார் என்பதை பார்க்கலாம்.
தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களிலேயே அதிக டெஸ்ட் சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 264 இன்னிங்ஸ்களில் 33 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார் ஜோ ரூட். இந்தப் பட்டியலில் அடுத்த இடங்களில் கேன் வில்லியம்சன் (32 சதம், 176 இன்னிங்ஸ்), ஸ்டீவ் ஸ்மித் (32 சதம், 195 இன்னிங்ஸ்), விராட் கோலி (29 சதம், 191 இன்னிங்ஸ்), புஜாரா (19 சதம், 171 இன்னிங்ஸ்) உள்ளனர்.
தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் அதிக சர்வதேச சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார் ஜோ ரூட். இந்த பட்டியலில் விராட் கோலி 80 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். ஜோ ரூட் 49 சதங்களுடனும், ரோகித் சர்மா 48 சதங்களோடும் அடுத்த இரண்டு இடங்களில் இருக்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் தற்போது பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறார். மேலும், இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் அலஸ்டர் குக்குடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் தற்போது ஏழாவது இடத்தில் இருக்கிறார் ஜோ ரூட். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் 1105 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடமான இரண்டாவது இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்துள்ளது. ஜோ ரூட் ஆட்டமிழந்த நிலையில், ஏழாம் வரிசையில் களமிறங்கிய கஸ் அட்கின்சன் அதிரடி ஆட்டம் ஆடி இலங்கை அணியை மிரள வைத்தார். கஸ் அட்கின்சன் 81 பந்துகளில் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். அவர் 5 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து இருக்கிறார்.