SL vs ENG: இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை.. ஸ்பின்னர்களை வைத்து அசத்தல் வெற்றி
கொழும்பு: இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றியின் விளிம்பில் இருந்த இங்கிலாந்து அணியை, இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்தி 19 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெறச் செய்தனர்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு ஆரம்பம் சீராக இருந்தாலும், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் அடில் ரஷித் மற்றும் ரீஹான் அகமது நெருக்கடி கொடுத்தனர். இதனால் 124 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது.

இந்த இக்கட்டான நிலையில் குசல் மெண்டிஸ் இலங்கை அணியை மீட்டார். தசைப்பிடிப்பு பிரச்சனை இருந்தபோதிலும், களத்தில் நின்று போராடிய அவர் 92 ரன்கள் குவித்தார். இவருக்கு உறுதுணையாக ஜனீத் லியானகே 46 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் துனித் வெல்லாலகே அதிரடி காட்டினார். ஜேமி ஓவர்டன் வீசிய அந்த ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என வெல்லாலகே வானவேடிக்கை காட்ட, 23 ரன்கள் கிடைத்தது. இதனால் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்தின் சிறப்பான துவக்கம்
272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் ஜோடி வலுவான அடித்தளம் அமைத்தது. இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 117 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது, வெற்றி அந்த அணியின் வசமே இருந்தது போல் தோன்றியது.
இலங்கை கேப்டன் சரித் அசலங்கா சுழற்பந்து வீச்சாளர்களை நம்பி பந்துவீச வைத்தார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. ஜெப்ரி வாண்டர்சே பந்துவீச்சில் பென் டக்கெட் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, இலங்கை அணிக்கு எதிராக எப்போதும் சிறப்பாக விளையாடும் ஜோ ரூட், தனஞ்செயா டி சில்வா பந்துவீச்சில் ஆட்டமிழந்தது போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது.
நடுவர் அவுட் இல்லை என்று கூறியபோதும், டிஆர்எஸ் (DRS) மூலம் இலங்கை அணி விக்கெட்டை உறுதி செய்தது. அதன் பிறகு வந்த கேப்டன் ஹாரி புரூக் மற்றும் ஜேக்கப் பெத்தல் ஆகியோர் குசல் மெண்டிஸால் மிகச்சிறப்பாக ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேறினர்.
இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையில், ஜேமி ஓவர்டன் தனி ஆளாகப் போராடினார். 17 பந்துகளில் 34 ரன்கள் விளாசிய அவர் கடைசி விக்கெட்டிற்கு அடில் ரஷித் உடன் இணைந்து 39 ரன்கள் சேர்த்தார். ஆனால் இந்த முயற்சி வெற்றிக்கு போதுமானதாக இல்லை. இறுதியில் இங்கிலாந்து அணி 49.2 ஓவரில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தனஞ்செயா டி சில்வா 8 ஓவர்கள் வீசி வெறும் 22 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். பிரமோத் மதுஷன் 3 விக்கெட்கள், டுனித் வெல்லாலகே 2 விக்கெட்கள், ஜெஃப்ரி 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி சனிக்கிழமை இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications