பார்படாஸ் : அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் ஜோர்டன் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 19வது ஓவரை வீசிய ஜோர்டன் 5 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அமெரிக்காவை ஆல் அவுட் செய்ய காரணமாக அமைந்துள்ளார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டியில் வலிமையான இங்கிலாந்து அணியை எதிர்த்து அமெரிக்கா அணி களமிறங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கியது. இதன்பின் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் அமெரிக்கா அணி தரப்பில் ஸ்டீவன் டெய்லர் - கெளஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இதில் கெளஸ் 8 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ஸ்டீவன் டெய்லர் - நிதிஷ் குமார் கூட்டணி சிறிது நேரம் அதிரடியாக ரன்கள் சேர்த்தது. இருவரும் சில சிக்சர்களை விளாசிய நிலையில், திடீரென அட்டாக்கில் வந்த ஸ்டீவன் டெய்லரை 12 ரன்களில் வீழ்த்தினார். இதன்பின் வந்த கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 10 ரன்களிலும், நிதிஷ் குமார் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் அமெரிக்கா அணி 67 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த கோரே ஆண்டர்சன் நிதானமாக ரன்கள் சேர்த்த நிலையில், அமெரிக்கா அணி 17 ஓவர்கள் முடிவில் 101 ரன்களை எட்டியது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஹர்மீத் சிங் 27 ரன்களில் ஆட்டமிழக்க, 19வது ஓவரை கிறிஸ் ஜோர்டன் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே கோரே ஆண்டர்சன் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
2வது பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. பின்னர் 3வது பந்தில் அலி கான் போல்டாகி வெளியேற, 4வது பந்தில் கென்சிகேவும் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க, ஜோர்டனுக்கு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 5வது பந்தில் நெட்ரவால்கர் போல்டாகி வெளியேறினார். இதன் மூலம் கிறிஸ் ஜோர்டன் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார்.
பார்படாஸை சேர்ந்த கிறிஸ் ஜோர்டன் சொந்த மண்ணிலேயே ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதேபோல் டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் ஜோர்டன் பெற்றுள்ளார். மேலும் அமெரிக்கா அணி 18.5 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அமெரிக்கா அணி கடைசி 6 பந்துகளில் 5 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.