ENG vs WI - ஜோ ரூட் மாபெரும் சாதனை.. சச்சின் சாதனை முறியடிக்கப்படுமா? இங்கிலாந்து ரன் குவிப்பு
நாட்டிங்காம் : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்களின் ரூட் அபாரமாக விளையாடி சாதனை ஒன்றை செய்திருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 18ஆம் தேதி நாட்டிங்காம் நகரில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி ஒரே நாளில் 416 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடங்கியது.

இதில் கெவின் ஹாஜ் அபாரமாக விளையாடி 120 ரன்கள் குவிக்க ஜோஸ்வா மற்றும் அலெக்ஸ் ஏத்தன்சி ஆகியோர் தலா 82 ரன்கள் சேர்த்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 487 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து 41 ரன்கள் பின்தங்கிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக விளையாடியது.
பென் டக்கட் 76 ரன்களும், ஆலி போப் 51 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்க, நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சுளுக்கு எடுத்தனர். இதில் ஹாரி புருக் சதம் அடிக்க ஜோ ரூட் தன்னுடைய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 158 பந்துகளில் ஜோரூட் தனது 32வது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் சதத்தை பூர்த்தி செய்தார்.
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஜோ ரூட் தற்போது எட்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். ஏற்கனவே எட்டாம் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சந்திர பால் 11,867 ரன்களுடன் இருந்தார். தற்போது ஜோ ரூட் அவரை முந்தி 11,912 ரன்கள் அடித்திருக்கிறார். இன்னும் 43 ரன்கள் கூடுதலாக எடுத்தால் அவர் பிரையன் லாராவின் சாதனையும் முந்தி விடுவார்.
தற்போது முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 15921 ரன்கள் அடித்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கரை விட 4,011 ரன்கள் ஜோ ரூட் பின்தங்கி இருக்கிறார். தற்போது ஜோ ரூட்க்கு 33 வயதாகிறது. ரூட் ஆண்டுதோறும் ஆயிரம் ரன்கள் என தொடர்ந்து நான்கு ஆண்டுகள் அப்படி விளையாடினால் மட்டுமே சச்சினின் சாதனையை முறியடிக்க முடியும். ஆனால் பெரும்பாலான இங்கிலாந்து வீரர்கள் 35 அல்லது 36 வயதில் ஓய்வு பெற்று விடுவார்கள். இதனால் சச்சினின் சாதனையை நெருங்குவது என்பது கடினம்தான்.


Click it and Unblock the Notifications