
சிறப்பான ஆட்டம்
முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 105 பந்துகளை சந்தித்து 19 ரன்களையும், ரஹானே 54 பந்துகளை சந்தித்து 18 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கில் வெளியேறினார்கள். லோகேஷ் ராகுல் 0, புஜாரா 1, கேப்டன் கோலி 7, பண்ட் 2, ஜடேஜா 4 என்று வெளியேறினார்கள். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், க்ரெய்க் ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளையும், ஓலே ராபின்சன், சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பிறகு, களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 432 ரன்கள் குவித்தது.

4ம் நாள் ஆட்டம்
இங்கிலாந்து தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் 61 ரன்களும், ஹஸீப் ஹமீத் 68 ரன்களும், டேவிட் மலன் 70 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஜோ ரூட் வழக்கம் போல, இந்திய பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 121 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். எனினும், இந்திய அணி 2வது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி வருகிறது. லோகேஷ் ராகுல் 8 ரன்களில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க வீரர் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து சொதப்பி வந்த புஜாரா, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 180 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதேபோல், கேப்டன் விராட் கோலி 94 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இந்த பரபரப்பான சூழலில், இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்று ஒருநாள் முழுவதும் இந்தியா பேட்டிங் செய்துவிட்டால், வெற்றிப் பெற முடிகிறதோ இல்லையோ நிச்சயம் தோல்வியில் இருந்து தப்பித்துவிடலாம் என்பதால், சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இன்னிங்ஸ் வெற்றி
ஆனால், புஜாரா மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல், ஓலே ராபின்சன் ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி 91 ரன்களில் வெளியேறினார். இதன் பிறகு, இந்த டெஸ்ட் தொடரில் முதல் அரைசதம் அடித்த விராட் கோலி, ஓலே ஆண்டர்சன் ஓவரில் 55 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு ரஹானே 10 ரன்களில் ஆண்டர்சன் ஓவரில் கேட்ச் ஆக, ரிஷப் பண்ட் வெறும் 1 ரன்னில் ராபின்சன் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேற, மொயீன் அலி ஓவரில் முகமது ஷமி 6 ரன்களில் அவுட்டானார். இறுதியில், இந்திய அணி 278 ரன்களில் ஆல் அவுட்டாக, இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்று சமநிலை ஆகியுள்ளது.

இஷாந்த், ஜடேஜா
அடுத்த போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் செப்டம்பர் 2ம் தேதி தொடங்குகிறது. இதில் இந்திய அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திறமையான வீரராக இருந்தாலும், ரவீந்திர ஜடேஜாவால் அணிக்கு இதுவரை எந்த வகையில் பயன் கிடைக்கவில்லை. பேட்டிங்கில் நன்றாக தான் விளையாடுகிறார். ஆனால், பவுலிங்கில் தான் எந்த இம்பேக்ட்டும் இல்லை. ஸோ, அடுத்த போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு நிச்சயம் மாற்று களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேபோல், பவுலிங்கில் இஷாந்த் ஷர்மா நீக்கப்படலாம் என்றும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications