சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் அடுத்த மாதம் மார்ச் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராக களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் எடுத்துள்ள முடிவு தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த ஐபிஎல் சீசனுக்கு முன் நடத்தப்பட்ட மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி பென் ஸ்டோக்ஸை 16 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது. ஆனால் பென் ஸ்டோக்ஸ், ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணிக்காக வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதில் 7 மற்றும் 8 ரன்களை பேட்டிங்கிலும் பந்துவீச்சில் ஒரு ஓவரில் 18 ரன்கள் விட்டுக் கொடுத்தும் அந்தத் தொடர் முழுவதும் காயம் காரணமாக வெளியேறினார்.

இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் வரும் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ராயுடு இல்லாத நிலையில் ஸ்டோக்ஸ் நடு வரிசையில் சிஎஸ்கே அணியின் பலத்தை அதிகரிப்பார் என ரசிகர்கள் நம்பினர். ஆனால் தற்போது மீண்டும் குண்டை தூக்கி போட்டு இருக்கிறார் பென் ஸ்டோக்ஸ். ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்தத் தொடரில் பங்குபெற முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த தொடர் முடிந்தவுடன் பென் ஸ்டோக்ஸ் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார். ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் தமக்கு ஏற்பட்ட காயத்தால் ஓவர்கள் வீச முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் பந்துவீச்சிலும் கவனம் செலுத்த உள்ளார். இதன் காரணமாக ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் பங்கேற்க போவதில்லை என்ற முடிவை பென் ஸ்டோக்ஸ் எடுத்துள்ளார். இது சிஎஸ்கே அணி நிர்வாகத்தை கடுப்படைய செய்துள்ளது.
இதில் ஒரு நல்ல விஷயமும் ஏற்பட்டிருக்கிறது. சிஎஸ்கே அணி நிர்வாகம் 16 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து இருந்தது. தற்போது அவர் அடுத்த சீசனின் பங்கேற்கவில்லை என்றால் அவரை அணியிலிருந்து நீக்கி விட்டு அந்த தொகையை வேறு ஏதேனும் நல்ல வீரருக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் பென் ஸ்டோக்சை நீக்கிவிடலாம் என்ற முடிவில் சிஎஸ்கே அணி நிர்வாகம் வந்துவிட்டது.