"இந்தியாவை வீழ்த்துவது எப்போதும் தனி சுகம்".. இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் தொடரை வென்று பெருமிதம்
பிரிஸ்டல்: இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் என்இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அது பற்றி பேசிய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் இந்தியாவை வீழ்த்துவது எப்போதும் தங்களுக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கும் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.
பிரிஸ்டலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் 80 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி விரைவாக ரன் குவித்தது. கேப்டன் ஹாரி புரூக்கின் 35 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். பிலிப் சால்ட் 59 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி வெறும் 13.5 ஓவர்களில் 159 ரன்கள் என்ற இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், "இந்தப் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இந்தியாவை வீழ்த்துவது எப்போதும் மகிழ்ச்சி தரும் விஷயமாகும். இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையிலேயே 3-0 என தொடரைக் கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் தொடரில் எங்களது வெற்றிக்கு இரண்டு விஷயங்கள் மிக முக்கியக் காரணமாக அமைந்தன. ஒன்று, மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப நாங்கள் உடனடியாகத் தகவமைத்துக் கொண்டது. மற்றொன்று, பயிற்சியாளர்களுக்கும் வீரர்களுக்கும் இடையே மிகச் சிறந்த தகவல் பரிமாற்றம் இருந்தது" என்றார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களைப் பாராட்டிய புரூக், "பந்துவீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங் ஆகியோர் மீண்டும் அபாரமாக செயல்பட்டு எதிரணியை நிலைகுலையச் செய்தனர். எங்கள் அணியில் பேட்டிங் வரிசை மிகவும் வலுவாகவும், ஆழமாகவும் உள்ளது. ரெஹான் அகமதுவை அணியில் சேர்த்தோம். எங்களது வலுவான பேட்டிங் வரிசையை நம்பியே களம் இறங்கினோம்" என்று குறிப்பிட்டார்.
தனது அதிரடி பேட்டிங் குறித்துப் பேசிய புரூக், "பேட்டிங் செய்யும்போது மிகவும் சிறப்பாக உணர்ந்தேன். மைதானத்தின் எந்தப் பகுதியில் அடிக்க வேண்டும் என்பது குறித்துப் பயிற்சியாளர்களுடன் நடத்திய ஆலோசனைகளே எனக்கு உதவின. டி20 கிரிக்கெட்டில் உலக அளவில் முதலிடத்தைப் பிடிப்பதே எங்களது தற்போதைய முக்கிய இலக்காகும்" என்று கூறினார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
