
50 ஓவர்கள்
லண்டன் லார்ட்ஸில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கடந்த ஆக.12ம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்து. இந்தியா தரப்பில் லோகேஷ் ராகுல் 129 ரன்களும், ரோஹித் ஷர்மா 83 ரன்களும் எடுத்தனர். பிறகு, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது. கேப்டன் ஜோ ரூட், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 180 ரன்கள் குவித்தார். பிறகு, 2ம் இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்கம் சொதப்பினாலும், மிடில் ஆர்டரில் புஜாரா - ரஹானே ஜோடி நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடியது. ரஹானே 61 ரன்களும், 45 ரன்களும் எடுத்தனர். அதுவும் கிட்டத்தட்ட இருவரும் இணைந்து 50 ஓவர்களை சந்தித்து இந்த ரன்களை எடுத்தனர்.

திருப்புமுனை
பிறகு, 9வது விக்கெட்டுக்கு பும்ரா - ஷமி ஜோடி நிகழ்த்திய அதகளம் குறித்து நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் குவித்து புது சாதனை படைத்தது. முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷமி மற்றும் பும்ராவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவேயாகும். இருவரும் இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 298 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக அமைந்தனர். அதுமட்டுமின்றி, ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தனர். அந்த பிறகு களமிறங்கிய இங்கிலாந்து, 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்று தொடரில் 1 - 0 முன்னிலை வகிக்கிறது. .

காத்திருப்போம்
இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் தவிர, வேறு எவரும் சிறப்பாக பேட் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணியில் அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. கடும் மன அழுத்தம் காரணமாக, பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டில் இருந்து காலவரையின்றி ஓய்வில் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், ஸ்டோக்ஸ் சேர்க்கப்படுவாரா என்பது குறித்து கேள்விக்கு பதில் அளித்த இங்கிலாந்து பயிற்சியாளர் க்றிஸ் சில்வர்வுட், "அணியில் மீண்டும் வந்து இணையுமாறு பென் ஸ்டோக்ஸ் மீது எந்த அழுத்தமும் வைக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் அவருக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. நான் காத்திருப்பேன், அவர் தயாராக இருக்கிறார் என்பதை அவரே என்னிடம் தெரியப்படுத்துவார். அதுவரை நிச்சயம் காத்திருப்போம். இதற்கு நேரம்.. கால வரம்பு என்று எதுவும் கிடையாது.

கைகள் கூப்பி வரவேற்போம்
இப்போது பென் ஸ்டோக்ஸ் நலமாக இருக்கிறார். அவருடைய குடும்பம் நலமாக உள்ளது, அவர் வலுவாக திரும்பி வருவார், அவர் மீண்டும் அணிக்குள் நுழையும்போது, நாம் அவரிடம் என்ன எதிர்பார்கிறோமோ அதை அவர் இங்கிலாந்துக்காக செய்து முடிப்பார். நான் நிச்சயமாக அவரின் பதிலுக்காக காத்திருக்கவில்லை. அது சரியான விஷயம் என்று நான் நினைக்கவில்லை. அவரைச் சுற்றி நிறைய பேர் இருக்கின்றனர். அவர்கள் அவரை ஆதரிக்கிறார்கள். அவர் மீண்டும் அணிக்குள் வரத் தயாராக இருக்கும்போது, நாங்கள் அவரை இரு கைகளை கூப்பி வரவேற்போம், அதுவரை அவருக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் இங்கிலாந்து வழங்கும்" என்று கூறியுள்ளார்.

திருப்பிக் கொடுப்போம்
மேலும், இந்திய அணி வீரர்கள் உடனான மோதல் குறித்து பேசிய பயிற்சியாளர் க்றிஸ் சில்வர்வூட், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி குறித்து சில அதிரடியான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், "அந்த சாதாரண சண்டையை நினைத்து நாங்கள் பயப்படவில்லை. அவர்கள் எங்களை சீண்டினார்கள். நாங்கள் திருப்பிக் கொடுக்க நினைத்தோம். அவ்வளவுதான். என்னை பொறுத்தவரை இந்த மோதல், ஒரு மிகச் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை உருவாக்கிவிட்டது. எனினும், போட்டி முடிவை பொறுத்தவரை நாங்கள் ஏமாற்றமடைகிறோம், ஆனால் இது என்ன அட்டகாசமான டெஸ்ட் போட்டி! போட்டியில் அனல் பறந்தது. தங்கள் நாட்டுக்காக விளையாடும் இரண்டு அணிகளும் அந்த போட்டியை நினைத்து பெருமை பட்டுக்கொள்ளலாம். அந்த போட்டியை நான் ரசித்து அனுபவித்தேன். இந்த போட்டியில் உணர்ச்சிகள் அதிகமாக இருந்தன, அதில் எந்த சந்தேகமும் இல்லை. வெளிப்படையாக, முதல் இன்னிங்சில் இந்திய வீரர்கள் ஆண்டர்சனை குறிவைத்தனர். அதனால், நாங்கள் அவர்களிடமும் கடுமையாக எதிர்வினையாற்றினோம். அவர்கள் கொடுப்பதை உடனுக்குடன் திருப்பிக் கொடுக்க முயன்றோம். இனிமேலும் முயற்சிப்போம். ஆனால், இந்திய அணியின் லோயர் சிறப்பாக விளையாடினார். அது போட்டியை எங்களிடம் இருந்து வெகுதூரம் எடுத்துச் சென்றுவிட்டது. இருப்பினும், இதிலிருந்தும் நாங்கள் பாடம் கற்றுக்கொள்வோம். நான் இங்கிலாந்து அணிக்கு சொல்ல விரும்புவது, அவர்கள் தங்கள் ஆர்வத்தை இழந்துவிடக் கூடாது. வெற்றிப் பெற வேண்டும் என்ற நமது ஆர்வத்தை நாம் பாஸிட்டிவாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆர்வம் தான் உங்களுக்கு ஆற்றலைத் தருகிறது, அது உங்களுக்கு எரிபொருளைத் தருகிறது என்று நான் கூறுவேன். நல்ல விஷயம் என்னவென்றால், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இன்னும் சிறிது கால நேரம் இருக்கிறது. அதனால் வீரர்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்று, தங்கள் குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவழிக்கலாம், கொஞ்சம் மன அமைதியடையலாம், மனதைத் தெளிவுபடுத்தி, ஃப்ரெஷ்ஷாக திரும்பலாம்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications