லண்டன் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் மாலன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முன்னாள் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆக விளங்கி டேவிட் மாலனுக்கு தற்போது 37 வயதாகிறது.
இங்கிலாந்து அணிக்காக 22 சர்வதேச டெஸ்ட் போட்டி 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 62 சர்வதேச டி20 போட்டிகளில் டேவிட் மாலன் விளையாட இருக்கிறார். அது மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் சதம் அடித்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையும் அவர் படைத்திருக்கிறார்.

கடந்த 2023 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு டேவிட் மாலன் எந்த ஒரு போட்டிகளிலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படவில்லை. அண்மையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்ட டி20 ஒருநாள் தொடர்களும் டேவிட் மாலன் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிருப்தி அடைந்த டேவிட் மாலன் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
டேவிட் மாலன் கடந்த 2017 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமாகி முதல் ஆட்டத்திலேயே 44 பந்துகளில் 78 ரன்கள் குவித்து தன்னுடைய திறமையை நிரூபித்தார். அதன் பிறகு ஆசஸ் தொடரில் பாரிஸ்டோ உடன் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அந்த போட்டியில் 227 பந்துகளில் டேவிட் மாலன் 140 ரன்கள் குவித்தார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த ஒரே சதம் இது மட்டும் தான். டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய திறமையை நிரூபித்தாலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் கால் பதித்து அணியின் முக்கிய வீரராக இடம் பிடிக்க டேவிட் மாலனுக்கு கொஞ்சம் நேரம் ஆனது. சர்வதேச t20 கிரிக்கெட்டில் 24 இன்னிங்ஸில் ஆயிரம் ரன்கள் கடந்து அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார்.
அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் இடம் பெற்றிருந்தார். அதன் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் ஜூன் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை நடைபெற்ற சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 15 இன்னிங்ஸில் இடைவெளியில் டேவிட் மாலன் ஐந்து சதம் அடித்து இங்கிலாந்து அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தார். அதன் பிறகு 50 ஓவர் உலகக் கோப்பையில் இடம் பிடித்த டேவிட் மாலன் தர்மசாலாவில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார்.
எனினும், அதன் பிறகு டேவிட் மாலனுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டேவிட் மாலன் டெஸ்ட் கிரிக்கெட்டை நான் கிரிக்கெட்டின் முக்கிய விஷயமாக கருதுகிறேன். அதுதான் இருப்பதிலேயே உச்சம். ஆனால் அந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னால் நினைத்தபடி விளையாட முடியவில்லை. நான் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜொலிக்காதது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமே.
ஏனென்றால் என்னுடைய புள்ளி விவரங்களை காட்டிலும் நான் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக தான் விளையாடுவேன். ஆனால் அது களத்தில் எதிர் ஒலிக்கவில்லை. நான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆர்வமாக இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு டேவிட் மாலன் உலகம் முழுவதும் நடைபெறும் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடிவு எடுத்திருக்கிறார். அண்மையில் சன்ரைசர்ஸ் அணி எஸ் ஏ டி 20 தொடரில் சாம்பியன் பட்டம் பெற டேவிட் மாலன் முக்கிய காரணமாக இருந்தார். இதேபோன்று பிஎஸ்எல் தொடரில் முல்தான் சுல்தான் அணிக்காக டேவிட் மால்ன் விளையாடுகிறார்.