லண்டன்: அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை விளாசிய 11வது வீரர் என்றா சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் சம்மன் தொடங்கியுள்ள நிலையில், கிரிக்கெட் சீசனும் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக அயர்லாந்து அணியுடனான 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த அயர்லாந்து அணி பிராட்-ன் வேகத்தில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இதன்பின்னர் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 524 ரன்களை குவித்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் போப் 205 ரன்களும், டக்கெட் 182 ரன்களும் விளாசினர். அதேபோல் நட்சத்திர வீரர் ஜோ ரூட் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் அடிக்கும் 58வது அரைசதம் இதுவாகும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் 11 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் சார்பாக முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக்-க்கு பின் 11 ஆயிரம் ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையையும் ஜோ ரூட் பெற்றுள்ளார். 130 போட்டிகளில் விளையாடியுள்ள மொத்தமாக 11,004 ரன்களை குவித்துள்ளார். அண்மைக் காலமாக ஜோ ரூட் அபாரமான ஃபார்மில் விளையாடி வருவதால், இந்த கிரிக்கெட் சீசனிலேயே ஆயிரம் ரன்களை விளாசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபேப் 4 பட்டியலில் உள்ள விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வில்லியம்சன் ஆகியோர் இன்னும் 9 ஆயிரம் ரன்களையே எட்ட முடியாமல் உள்ளனர். ஆனால் ஜோ ரூட் 11 ஆயிரம் ரன்களை கடந்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் சர்வதேச வீரர்களில் அதிக டெஸ்ட் ரன்களையும் குவித்துள்ள வீரர் என்ற பெருமையும் ஜோ ரூட் வசமே உள்ளது குறிப்பிடத்தக்கது.