ஆஷஸ் டெஸ்ட்.. எதிர்பாராத எதிர் தாக்குதல் நடத்திய இங்கிலாந்து! நிலைகுலைந்தது ஆஸி. பேட்டிங்
லண்டன்: ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் கை ஓங்கியுள்ள நிலையில் ஆஸ்திரேலியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்போடு இன்று 3வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.
இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான, புகழ்பெற்ற, ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது, இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்ற நிலையில் 3வது டெஸ்ட் நேற்று, புதன்கிழமை தொடங்கியது.

ஏமாந்த ஆஸி. கேப்டன்
டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க், 2வது டெஸ்டை போலவே முதலில் பேட்டிங் செய்து இமாலய இலக்கை குவிக்கலாம் என்று நினைத்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். ஆனால், இரண்டாவது டெஸ்டில் மோசமாக தோற்ற இங்கிலாந்து அதற்கு பழி தீர்க்கும் உத்வேகத்தில் ஆக்ரோஷமாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை நிலைகுலையச் செய்தது.

ஆன்டர்சன் அபாரம்
அந்த அணி, 136 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்தின் நம்பிக்கை பவுலர் ஆன்டர்சன் 47 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்து ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆஷஸ் தொடரில் ஆன்டர்சன், இன்னிங்ஸ் ஒன்றில் சாய்த்த அதிக விக்கெட் இதுவாகும்.

ரோஜர்ஸ் கலக்கல்
ஆஸ்திரேலிய தரப்பில், நம்பிக்கை நட்சத்திரம், ரோஜர்ஸ் அதிகபட்சமாக 52 ரன்களை எடுத்தார். இதற்கு அடுத்தபடியாக அதிக ரன் எடுத்த வீரர் என்றால் ஆடம் வோக்ஸ். அவர் எடுத்ததோ 16 ரன்கள். மற்ற ஆஸி. பேட்ஸ்மேன்கள் பெவிலியன் பெரேட் நடத்தினர்.

பரபரப்பு கட்டம்
முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 133 ரன்களை எடுத்து வலுவாக உள்ளது. இந்நிலையில், ஆட்டத்தின் 2வது நாளான இன்று, மைதானத்தின் ஈரப்பதத்தை பயன்படுத்தி, ஆஸி. வேகங்களான ஜான்சன், ஸ்டார்க் போன்றோர் இங்கிலாந்தை உருட்டி போடுவார்களா, அல்லது முதல் இன்னிங்சில் இங்கிலாந்து வலுவான அடித்தளம் அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications