கட்டாக்: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என இழந்த இங்கிலாந்து அணி பல்வேறு மோசமான சாதனைகளைச் செய்து அவமானத்தை சந்தித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக இந்திய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் இங்கிலாந்து அணி இதுவரை வென்றதில்லை. அந்த மோசமான செயல்பாடு இந்தத் தொடரிலும் தொடர்ந்தது.
மேலும், 2023 உலகக் கோப்பை தொடருக்கு பின் தான் ஆடிய அனைத்து ஒருநாள் தொடர்களிலும் தோல்விகளை சந்தித்து இருக்கிறது இங்கிலாந்து அணி. அதே தோல்வி முகத்துடன் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு செல்ல உள்ளது.

மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 304 ரன்கள் எடுத்த போதும் மீண்டும் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதையடுத்து 2-0 என இங்கிலாந்து அணி தொடரை இழந்தது.
இதுவரை ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து 99 முறை 300 ரன்களுக்கு மேல் எடுத்தது. அதில் 28 முறை தோல்வி அடைந்து படுமோசமான சாதனை ஒன்றைச் செய்து இருக்கிறது. ஒருநாள் போட்டிகளில் 300 ரன்கள் அடித்தும் அதிகத் தோல்விகளைச் சந்தித்த அணிகளின் பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது.
இந்தப் பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி இதுவரை 136 போட்டிகளில் 300 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை எடுத்து இருக்கிறது. அதில் 27 முறை தோல்வி அடைந்து இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி 62 முறை 300+ ரன்களை எடுத்து 23 தோல்விகளையும், இலங்கை அணி 87 முறை 300+ ரன்களை எடுத்து 19 தோல்விகளையும் சந்தித்து அடுத்த இரண்டு இடங்களில் இருக்கின்றன.
இது மட்டுமின்றி இங்கிலாந்து அணி மேலும் சில மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டு உள்ளது. கடந்த 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை முதல் இங்கிலாந்து அணி தான் ஆடிய நான்கு ஒருநாள் தொடர்களிலும் வரிசையாக தோல்விகளைச் சந்தித்து இருக்கிறது. 2023 உலகக் கோப்பையிலும் இங்கிலாந்து அணி மோசமாகவே செயல்பட்டது.
அதன் பின்னர் ஆடிய நான்கு ஒருநாள் தொடர்களிலும் அந்த அணி ஒரு தொடரில் கூட வெற்றி பெறவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் இந்திய மண்ணில் ஆடிய ஒருநாள் தொடர்களில் தொடர்ந்து ஏழு முறை தோல்வியைச் சந்தித்து இருக்கிறது.