“விடைபெறுகிறேன்”.. 2 உலகக்கோப்பைகளை வென்ற இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் ஓய்வு
லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான மார்க் வுட், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். 36 வயதான இவர், இங்கிலாந்து அணி 2 உலகக் கோப்பைகளை வெல்வதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார். காயம் காரணமாக இங்கிலாந்து அணியில் இடம் பெற முடியாமல் தவித்து வந்த மார்க் வுட் தற்போது ஓய்வை அறிவித்து இருக்கிறார்.
களத்தில் மணிக்கு 150 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் அனல் பறக்க பந்துவீசும் மார்க் வுட், இங்கிலாந்து அணி 2019-ல் தனது சொந்த மண்ணில் முதல்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்றபோது 18 விக்கெட்டுகளை அள்ளி மிரட்டினார். தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றபோதும், வெறும் 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாம்பியன் பட்டத்திற்கு வித்திட்டார். இவர் இங்கிலாந்து அணிக்காக 70 ஒருநாள் போட்டிகளில் 80 விக்கெட்டுகளையும், 38 டி20 போட்டிகளில் 54 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.

டெஸ்ட் அரங்கில் 2015-ல் அறிமுகமான மார்க் வுட், 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 119 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2015 ஆஷஸ் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானித்த வரலாற்றுச் சிறப்புமிக்க கடைசி விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். 2023 ஆஷஸ் தொடரிலும் அசுர வேகத்தில் பந்துவீசி ஆஸ்திரேலிய பேட்டர்களை திணறடித்து இங்கிலாந்து அணி மீண்டு வர உதவினார்.
எனினும், தொடர் காயங்கள் இவரது கிரிக்கெட் பயணத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்தன. இடது முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு 8 மாதங்கள் கழித்து 2025 ஆஷஸ் தொடரில் களமிறங்கினார். ஆனால் வெறும் 11 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் மீண்டும் முழங்காலில் வீக்கம் ஏற்பட்டு தொடரிலிருந்து வெளியேறினார்.
நீண்ட நேரம் பந்து வீச வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரால் இனி பந்துவீச முடியாது என மருத்துவர்கள் எச்சரித்ததால், வேறு வழியின்றி தனது 11 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு மார்க் வுட் விடை கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications

