மீண்டும் சறுக்கிய இந்தியா.. லார்ட்ஸ் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் தோல்வி!
லார்ட்ஸ்: இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி பெறும் முதல் இன்னிங்ஸ் தோல்வி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்ற நிலையில் லார்ட்ஸில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

மழையின் காரணமாக முதல் நாள் போட்டி நடைபெறாத நிலையில் நேற்று இரண்டாம் நாள் போட்டியில் இந்திய அணி 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மூன்றாம் நாள் போட்டி முடிவில் இங்கிலாந்து அணி 357 ரன்களை எடுத்திருந்தது. நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி 396 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 289 ரன்கள் முன்னிலை பெற்றது.
289 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ்யை ஆடத்தொடங்கிய இந்திய அணி வரிசையாக விக்கெட்களை இழந்தது. இறுதியில் 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் ஆட்டமிழக்காமல் 33 ரன்களை எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன்,பிராட் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.


Click it and Unblock the Notifications