லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணி 6.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 11 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. துவக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய் ரன் எடுக்காமலும், ராகுல் 8 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் எட்பாஸ்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 31 ரன்களில் வென்றது.

முதல் டெஸ்டில், இரண்டாவது இன்னிங்ஸில் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா இருந்தது. கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிய நிலையில், இந்தியா தோல்வியை சந்தித்தது.
கடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சு சிறப்பாக அமைந்திருந்தது. இங்கிலாந்தின் 20 விக்கெட்களையும் இந்திய பவுலர்கள் வீழ்த்தினர். ஆனால், பேட்டிங்கில்தான் இந்திய அணி சொதப்பியது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. மழையால் நேற்று நடக்கவிருந்த முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், இரண்டாவது நாளான இன்று மழை சற்று ஓய்ந்துள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் ஷிகார் தவான் மற்றும் உமேஷ் யாதவுக்குப் பதிலாக சத்தேஸ்வர் புஜாரா, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பேட்டிங்கை துவக்க இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி அளித்தது இங்கிலாந்து. ரன் ஏதும் எடுக்காமல் முரளி விஜய் ஆட்டமிழந்தார். 8 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல் ஆட்டமிழந்தார். இரண்டு விக்கெட்களையும் ஜேம்ஸ் ஆன்டர்சன் வீழ்த்தினார்.
6.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் என்ற நிலையில் இந்தியா உள்ளது. புஜாரா மற்றும் கேப்டன் கோஹ்லி தலா 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்த நிலையில், மீண்டும் மழை துவங்கியதால், ஆட்டம் நிறுத்தப்பட்டது.