முடிவுக்கு வந்தது இந்தியாவின் 1605 நாட்கள் ஆதிக்கம்.. டி20 தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இங்கிலாந்து
டெல்லி: சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசையில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத அணியாக முதலிடத்தில் நீடித்து வந்த இந்திய அணியின் ஆதிக்கம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்ததன் மூலம், தொடர்ந்து 1,605 நாட்களாக தன் வசம் வைத்திருந்த உலகின் முதலிடத்தை இந்திய அணி இங்கிலாந்திடம் பறிகொடுத்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த இந்திய அணி, அதன் பிறகு 2024 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைகளை வென்று உலக அரங்கில் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தது. ஆனால், சமீபகாலமாக இந்திய அணியின் சொதப்பலான ஆட்டத்தால் இந்த அரியணை கைவிட்டுப் போயுள்ளது.

முதலில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை 0-2 என இழந்த இந்தியா, தற்போது இங்கிலாந்திடம் 0-4 என மிக மோசமாக ஒயிட்வாஷ் தோல்வி அடைந்து முதலிடத்தைத் தாரைவார்த்துக் கொடுத்துள்ளது.
சவுதாம்ப்டனில் நடைபெற்ற 5வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 258 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா, 20 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஜோஸ் பட்லர் 131 ரன்கள் மற்றும் கேப்டன் ஹாரி புரூக் 95 ரன்கள் எடுத்தனர்.
அவர்களின் அதிரடியைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர். இவர்கள் இருவரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு அமைத்த 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் இந்தியாவின் முதலிட கனவை அடியோடு தகர்த்தது.
தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு மேல் முதலிடத்தில் கம்பீரமாக வீற்றிருந்த இந்திய அணி, தற்போது தனது முதலிடத்தை இழந்திருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சரிவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, விரைவில் தனது தவறுகளைச் சரிசெய்து கொண்டு இந்திய அணி மீண்டும் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.


Click it and Unblock the Notifications
