உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணிக்கு 12 புள்ளிகள் அபராதம்.. ஐசிசி அதிரடி
லண்டன்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணிக்கு, மெதுவாக பந்துவீசியதற்காக 12 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை அபராதமாக விதித்து ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஓவல் மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 253 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த தோல்வியின் சோகம் மறைவதற்குள், இங்கிலாந்து அணிக்கு ஐசிசி மற்றொரு பேரிடியை கொடுத்தது. இப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் இங்கிலாந்து அணி 12 ஓவர்கள் குறைவாக வீசியது கண்டறியப்பட்டது. இதனால், அந்த அணியின் வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி விதிமுறை 2.22 இன் படி, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசத் தவறினால், ஒவ்வொரு ஓவருக்கும் 5 சதவீத போட்டி கட்டணம் அபராதமாக விதிக்கப்படும். அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதிமுறை 16.11.2 இன் படி, குறைவாக வீசப்பட்ட ஒவ்வொரு ஓவருக்கும் தலா 1 புள்ளி வீதம் குறைக்கப்படும். இங்கிலாந்து அணியின் தற்காலிக கேப்டன் ஜோ ரூட் இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதால், முறையான விசாரணை எதுவும் இன்றி அபராதம் உறுதி செய்யப்பட்டது.
இந்த 12 புள்ளிகள் குறைக்கப்பட்டதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணி 38 புள்ளிகளுடன் 7வது இடத்திற்கு சரிந்துள்ளது. அதன் புள்ளிகள் சதவீதம் 34.72 இல் இருந்து 26.38 ஆக கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி 109 ரன்கள் மட்டுமே கொடுத்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தின் படுதோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் 1 - 1 என சமநிலையில் உள்ளன.


Click it and Unblock the Notifications
