எலும்பு முறிவு... கையில் கட்டுடன் விளையாட வந்தார்.... கவுன்டி வீரரின் கமிட்மென்ட்!
லண்டன்: கை கட்டைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், கட்டுப் போட்டுக் கொண்டு, காலில் அணியும் பேடை கையில் அணிந்து விளையாட வந்தார் இங்கிலாந்து கவுன்டி அணியின் வீரர். அந்தப் படம், சமூகதளங்களில் வெகுவாக பாராட்டை பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் கவுன்டி அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் யார்க் ஷயர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லான்காஷையர் அணி விளையாடியது.
இந்தப் போட்டியின்போது ஃபீல்டிங் செய்யும்போது லான்காஷையர் அணியின் கேப்டன் லியாம் லிவிங்ஸ்டனுக்கு கை கட்டைவிரலில் காயமேற்பட்டது. எலும்பு முறிவு ஏற்பட்டதால் கட்டுப் போடப்பட்டது. முதல் இன்னிங்சில் அவர் பேட்டிங் செய்யவில்லை.
இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் அணி மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தது. அப்போது கடைசி வீரராக களமிறங்கினார் விலிங்ஸ்டன். கை கட்டைவிரலை பாதுகாக்கும் வகையில், காலில் அணியும் பேடை வைத்து மறைத்துக் கொண்டு களமிறங்கினார். ஆனால் அவருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தப் போட்டியில் யார்க் ஷயர் அணி 118 ரன்களில் வென்றது.

இங்கிலாந்தின் காலின் கவ்ட்ரி
இதற்கு முன் 1963ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கையில் கட்டு போட்டுக் கொண்டு இங்கிலாந்தின் காலின் கவ்ட்ரி விளையாடினார். அந்தப் போட்டியில் இங்கிலாந்து டிரா செய்தது.

அனில் கும்ப்ளே அபாரம்
அதேபோல் 2002ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது தாடையில் பந்து பட்டதால் இந்தியாவின் அனில் கும்ப்ளே காயமடைந்தார். ஆனால், கட்டு போட்டுக் கொண்டு விளையாட வந்தார்.
ஒற்றை கையால் விளையாடினார்
இங்கிலாந்துக்கு எதிராக 1984ல் நடந்த டெஸ்ட் போட்டியின்போது, வெஸ்ட் இண்டீஸ் அணியின் மால்கம் மார்ஷல் கடைசி வீரராக வந்தார். ஒரு கையால் பந்தை அடித்து ரன் எடுத்தார். அதனால், லாரி கோம்ஸ்க்கு சதமடிக்கும் வாய்ப்பை கிடைத்தது.
பாராட்டை பெற்றார்
இந்த வரிசையில் கவுன்டி அணிக்கான போட்டியில் கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டபோதும் காலில் அணியும் பேடுடன் விளையாட வந்த லியாம் லிவிங்ஸ்டனின் படம் சமூகதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications