லீட்ஸ்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து அணியின் இளம் நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக் படைத்துள்ளார்.
ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் குறித்த பேச்சுகள் அதிகமாக இருந்தன. பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட், ஸ்காட் போலாந்த் என்று மிரட்டலான வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பதால் இங்கிலாந்து அணியின் பேஸ் பால் திட்டம் பலிக்காது என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹாரி ப்ரூக், ஆஸ்திரேலிய அணியின் எவ்வளவு வேகமாக பந்துவீசுகிறார்களோ, அதே வேகத்தில் பந்து பவுண்டரி எல்லையில் இருக்கும் என்று கூறி ஆச்சரியம் அளித்தார்.

இதுவரை ஒரு ஆஷஸ் தொடரில் கூட விளையாடாத ஹாரி ப்ரூக்கிற்கு இவ்வளவு ஆணவப் பேச்சா என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். ஆனால் ஹாரி ப்ரூக் சொல்லியதற்கு ஏற்ப பேட்டிங்கில் செயல்படவில்லை. முதல் இரு போட்டிகளிலும் மோசமான பேட்டிங்கையே வெளிப்படுத்தினார். முக்கியமான நேரத்தில் தேவையில்லாத ஷாட்டை விளையாடி விக்கெட்டை பறிகொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்த நிலையில் 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸ்களில் இங்கிலாந்து அணியின் சீனியர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பிய போது, மறுமுனையில் நின்ற ஹாரி ப்ரூக் பொறுப்புடன் விளையாடினார். சிறப்பாக ஆடிய ஹாரி ப்ரூக் 75 ரன்கள் விளாசி அசத்தினார். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு ஹாரி ப்ரூக்கின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

17 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஹாரி ப்ரூக் 1058 பந்துகளில் ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு முன் நியூசிலாந்து அணியின் கிராந்தோம் 1,140 பந்துகளிலும், டிம் சவுதி 1,167 பந்துகளிலும், இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் 1,168 பந்துகளில் ஆயிரம் ரன்களை கடந்த பட்டியலில் முன்னிலையில் இருந்தனர். இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹாரி ப்ரூக் 4 சதங்கள், 5 அரைசதங்களை விளாசி அசத்தியுள்ளார்.