இங்கிலாந்தின் உலகக்கோப்பை கேப்டன் ஓய்வு.. விடைபெற்றார் அதிரடி நாயகன் இயான் மோர்கன்..ஏன் இந்த முடிவு?
லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியை உலகின் பலமான அணியாக எடுத்துச்சென்று அழகுபார்த்த இயான் மோர்கன் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக கடந்த 2009ம் ஆண்டு அறிமுகமானவர் நட்சத்திர பேட்ஸ்மேன் இயான் மோர்கன். மோர்கனின் அதிரடி ரன் வேட்டையால் எதிரணிகள் திணறிய போது தான் அவரிடம் கேப்டன்சி பொறுப்பை கொடுத்தனர்.
மோர்கனின் தலைமையில் இங்கிலாந்து அணி 2016, 2017ம் ஆண்டுகளில் மிகவும் மோசமான தோல்விகளை சந்தித்து விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் அதனையெல்லாம் தகர்த்தெறிந்து அதே அணிக்காக உலகக்கோப்பையை வென்றுக்கொடுத்தார்.

என்னதான் உலகின் முன்னணி அணியாக வலம் வந்த போதும் இங்கிலாந்தால் 50 ஓவர் உலகக்கோப்பையை ஒரு முறை கூட வெல்ல முடியாமல் இருந்து வந்தது. அந்த காத்திருப்புக்கு கடந்த 2019ம் ஆண்டு மோர்கன் தலைமையிலான படை தான் முடிவு கொடுத்தனர். ஆனால் அதற்கு பின்னர் மோர்கனின் வேகம் குறைந்தது என்றுதான் கூற வேண்டும். சரியான ஃபார்மில் இல்லாததால் கழட்டிவிடப்பட்டு உள்நாட்டு தொடர்களில் ஆடி வருகிறார்.
இந்நிலையில் தான் 3 வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிரிக்கெட்டில் எனக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை கூறிக்கொள்கிறேன். அயர்லாந்தில் இருந்து 2005ம் ஆண்டு இங்கிலாந்துக்கு வந்தேன். அப்போது இருந்து அந்த அணிக்காக ஆடிய அனைத்து தருணங்களும் மறக்கமுடியாத ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.

அதிரடி வீரர் இதுவரை 16 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 ரன்களை எடுத்துள்ளார். இதில் 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும். இதே போல 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 14 சதங்கள் மற்றும் 47 அரைசதங்களுடன் சேர்த்து 7,701 ரன்களை அடித்திருக்கிறார். மோர்கனின் அதிரடிக்கு தீனிப்போடும் வகையில் 115 டி20 போட்டிகளில் விளையாடி 2,458 ரன்களை அடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications