மச்சி ஓபன் "தி பேட்டில்"... நம்பர் 1 இடத்தை தக்க வைக்க தயாராகும் "கோஹ்லி அன் கோ"!
ராஜ்கோட்: டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது அதைத் தக்க வைக்கும் முஸ்தீபுகளுடன் நாளை தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியைச் சந்திக்கவுள்ளது.
ராஜ்கோட்டில் நாளை இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. தர வரிசையில் இந்தியா முதலிடத்திலும், இங்கிலாந்து 4வது இடத்திலும் உள்ளன. இரு அணிகளுக்கும் இடையே புள்ளிகள் அடிப்படையில் பார்த்தால் 10 புள்ளி வித்தியாசம் உள்ளது (இந்தியா 115).
இந்தியா இந்தத் தொடரை வெல்ல முடியாவிட்டாலும் கூட தோற்காமல் டிரா செய்தால் கூட போதும். முதலிடத்தைத் தக்க வைத்துக் கொள்ளமுடியும் என்பதால் ஐந்து டெஸ்ட் போட்டி கொண்ட இந்தத் தொடரை இந்திய வீரர்கள் முக்கியமாக எடுத்துக் கொள்வார்கள் என நம்பலாம்.

நான்கு அணிகளும், ஒரு மல்லுக்கட்டும்
இந்தியாவிடம் உள்ள முதலிடத்தைப் பிடிக்க பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. எனவே இந்தியா சுதாரிப்பாக இல்லாவிட்டால் இதில் யாராவது ஒருவர் முதலிடத்தைப் பிடித்து விட வாய்ப்பு ஏற்பட்டு விடும்.

டிரா தேவை
இருப்பினும் இந்தியா இத்தொடரை டிரா செய்து விட்டால் போதும் இந்தியாவின் இடத்திற்கு ஆபத்து வராது. ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் - நியூசிலாந்து தொடரின் முடிவு எதுவாக இருந்தாலும் அது இதைப் பாதிக்காது.

113 புள்ளிகள்
இந்தியா டிரா செய்தால் அதன் புள்ளிகள் 113 ஆக குறையும். அதேசமயம், ஆஸ்திரேலியாவோ அல்லது தென் ஆப்பிரிக்காவோ, பாகிஸ்தானோ தொடரை வென்றாலும் கூட இந்தியாவை எட்டிப் பிடிக்க முடியாது.

இந்தியா வென்றால்
அதேசமயம், இந்தியா 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றால் அது 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடரும். 4-1 என்ற கணக்கில் வென்றால் 119 புள்ளிகள் கிடைக்கும். ஐந்து போட்டிகளிலும் வென்றால் 122 புள்ளிகள் கிடைக்கும்.

இங்கிலாந்து வென்றால்
இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் வென்றால் அதற்கு 108 புள்ளிகள் கிடைக்கும். 4-1 என்ற கணக்கில் வென்றால் 110 புள்ளிகளுடன் இந்தியாவைத் தாண்டி சென்று முதலிடத்தைப் பிடிக்கும்.


Click it and Unblock the Notifications