லண்டன்: இங்கிலாந்து மற்றும் இந்திய அண்டர் 19 அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, நார்தாம்டனில் உள்ள கவுண்டி மைதானத்தில் இன்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து அண்டர் 19 அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்தது. இங்கிலாந்து கேப்டன் தாமஸ் ரேவ் அடித்த அற்புதமான சதம், இந்த திரில் வெற்றிக்கு வித்திட்டது.
இந்திய அண்டர் 19 கேப்டன் ஆயுஷ் மத்ரே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஐபிஎல் தொடரில் இவர் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக ஆடி இருந்த நிலையில் அண்டர் 19 அணியில் ஏமாற்றம் அளித்து இருக்கிறார். இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடியும் அது வீணானது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அண்டர் 19 அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்திய அண்டர் 19 அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. கேப்டன் ஆயுஷ் மத்ரே ஒரு ரன் கூட எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். எனினும், வைபவ் சூர்யவன்ஷி 34 பந்துகளில் 45 ரன்களையும், விஹான் மல்ஹோத்ரா 68 பந்துகளில் 49 ரன்களையும் அடித்து, அணிக்கு ஓரளவு பலம் சேர்த்தனர். வைபவ் சூர்யவன்ஷி தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரிகளையும் 3 சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். விஹான் மல்ஹோத்ரா 6 பவுண்டரிகளை அடித்தார்.
நடுவரிசையில், அபித்யன் குண்டு 41 பந்துகளில் 32 ரன்களும், ராகுல் குமார் 47 பந்துகளில் 47 ரன்களும், கனிஷ்க் சௌஹான் 40 பந்துகளில் 45 ரன்களும் எடுத்து, இந்திய அணியை சவாலான ஸ்கோரை நோக்கி வழிநடத்தினர். ராகுல் குமார் தனது இன்னிங்ஸில் 6 பவுண்டரிகளையும் ஒரு சிக்ஸரையும் விளாசினார். கனிஷ்க் சௌஹான் 6 பவுண்டரிகளை அடித்தார். 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 290 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து தரப்பில், அலெக்ஸ் ஃபிரெஞ்ச் 10 ஓவர்களில் 71 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாகப் பந்துவீசினார். ஜாக் ஹோம் 9 ஓவர்களில் 63 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், அலெக்ஸ் கிரீன் 10 ஓவர்களில் 50 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இங்கிலாந்து அணி 26 வைடுகள் உட்பட 32 கூடுதல் ரன்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
291 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அண்டர் 19 அணியும் ஆரம்பத்தில் தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் பி.ஜே. டாவுக்கின்ஸ் 7 ரன்களில் ஆட்டமிழக்க, பென் மேய்ஸ் 29 பந்துகளில் 27 ரன்களும், ஐசக் முகமது 30 பந்துகளில் 11 ரன்களும் எடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு கட்டத்தில் 12 ஓவர்களில் 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து சரிவை சந்தித்தது.
ஆனால், கேப்டன் தாமஸ் ரேவ் 89 பந்துகளில் 131 ரன்கள் குவித்து, அற்புதமான இன்னிங்ஸை ஆடி, அணியை சரிவிலிருந்து மீட்டார். அவர் 16 பவுண்டரிகளையும் 6 சிக்ஸர்களையும் அடித்து இந்திய பந்துவீச்சை சிதறடித்தார். அவர் ராக்கி ஃபிளின்டாஃப் 68 பந்துகளில் 39 ரன்களுடன் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்து அணியை வலுப்படுத்தினார்.
தாமஸ் ரேவ் ஆட்டமிழந்த பின்னர், இங்கிலாந்து மீண்டும் விக்கெட்டுகளை இழந்தது. ஜோசப் மூர்ஸ் 20 பந்துகளில் 13 ரன்களும், ரால்ஃபி ஆல்பர்ட் 21 பந்துகளில் 18 ரன்களும், ஜாக் ஹோம் 6 பந்துகளில் 3 ரன்களும், அலெக்ஸ் கிரீன் 11 பந்துகளில் 12 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேற, ஆட்டம் இறுதி ஓவர் வரை சென்றது.
இந்திய தரப்பில் ஆர்.எஸ்.அம்ப்ரிஷ் 10 ஓவர்களில் 80 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தார். ஹெனீல் படேல் 10 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், யுதாஜித் குஹா 9.3 ஓவர்களில் 63 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து அணிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டன. முகமது எனான் பந்துவீச வந்தார். செபாஸ்டியன் மோர்கன் 12 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 20 ரன்களும், அலெக்ஸ் ஃபிரெஞ்ச் 5 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 3 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
மோர்கன் கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் ஒரு பவுண்டரி அடித்து, இங்கிலாந்து அணிக்கு த்ரில் வெற்றியைத் தேடித் தந்தார். 49.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடர் 1-1 என சமன் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.