அகமதாபாத் : ஒருநாள் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் எளிதில் செய்ய முடியாத சாதனை ஒன்றை இங்கிலாந்து அணி படைத்துள்ளது. இந்த சாதனையை சொன்னால் எந்த கிரிக்கெட் ரசிகராலும் நம்பக் கூட முடியாது.
ஆம், ஒருநாள் போட்டியில் ஒரு அணியின் 11 வீரர்களும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை இதுவரை அடித்ததே இல்லை. இதை நம்புவதற்கே கடினமாக உள்ளது. ஆனால், இப்படி ஒரு சம்பவம் கிரிக்கெட்டில் இன்றுதான் நடந்துள்ளது.

அந்த சாதனையை செய்த முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. 2023 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே ஒருநாள் போட்டி வரலாற்றில் மைல்கல்லாக விளங்கும் வகையில் இந்த சாதனையை அந்த அணி செய்துள்ளது.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் 2023 உலகக்கோப்பை போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் மூத்த வீரர் ஜோ ரூட் மட்டுமே நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தார். அவர் 86 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்கள் அனைவரும் குறைந்த ரன்களே எடுத்தனர். ஜோ ரூட்டுக்கு அடுத்து கேப்டன் ஜோஸ் பட்லர் 43 ரன்கள் எடுத்ததே அதிகபட்சம். ஆனால், அனைத்து வீரர்களும் கடைசி விக்கெட் வரை ஆடி ஒவ்வொருவரும் 10 ரன்களுக்கும் மேல் எடுத்தனர்.
இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 282 ரன்கள் குவித்தது. அந்த அணி எதிர்பார்த்ததை விட குறைவான ரன்கள் எடுத்தாலும் இந்த புதிய வரலாற்று சாதனையை படைத்தது.
பொதுவாக ஒருநாள் போட்டிகளில் 9 - 10 விக்கெட் வரை ஒரு அணி இழந்தால் நிச்சயம் சில வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ரன் எடுத்து ஆட்டமிழந்து இருப்பார்கள். அதன் காரணமாகவே அந்த அணி அதிக விக்கெட்களை இழக்கும்.
ஆனால், இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி சுமாராக ஆடினாலும் அனைத்து வீரர்களும் 10 ரன்களுக்கும் மேல் எடுத்தனர். சில அணிகளில் கடைசி விக்கெட்டுக்கு ஆடும் வீரர்கள் ரன் எடுக்க தடுமாறுவார்கள்.
ஆனால், இங்கிலாந்து அணியின் கடைசி இரண்டு பேட்ஸ்மேன்கள் அதில் ரஷித் 15 ரன்களும், மார்க் வுட் 13 ரன்களும் எடுத்தனர். இதுவரை 4657 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. ஆனால், அதில் எல்லாம் செய்யாத சாதனையை இங்கிலாந்து அணி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.