அடுத்த சச்சின்.. முதல் போட்டியிலேயே நிரூபித்த ரச்சின்.. அதிரடி சதம்.. 2 சாதனைகள் காலி
அகமதாபாத் : இந்திய வம்சாவளியை சேர்ந்த நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் அதிரடி சதம் விளாசினார்.
வெறும் 82 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம் அவர் நியூசிலாந்து அணிக்காக இரண்டு சாதனைகளை செய்துள்ளார். அவரது தந்தை அவருக்கு சச்சினின் மீதான ஈர்ப்பால் ரச்சின் என பெயர் வைத்தார். அதை நிரூபிக்கும் வகையில் ரச்சின் தனது முதல் உலகக்கோப்பை போட்டியிலேயே சதம் அடித்து மிரட்டி இருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி 2023 உலகக்கோப்பை போட்டியில் ஆடியது. கடந்த 2019 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் மோதிய அணிகள் என்ற அடிப்படையில் இந்த இரு அணிகளும் முதல் போட்டியில் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 282 ரன்கள் மட்டுமே எடுத்தது. பேட்டிங் செய்ய எளிதான ஆடுகளத்திலேயே அந்த அணி குறைவான ரன்களை எடுத்தது.
அடுத்து நியூசிலாந்து அணி சேஸிங் செய்ய வந்தது. அந்த அணியின் துவக்க வீரர் வில் யங் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்தார் ரச்சின் ரவீந்திரா.
மற்றொரு துவக்க வீரர் டெவான் கான்வேயுடன் கூட்டணி அமைத்த ரவீந்திரா அதிரடி ஆட்டம் ஆடினார். இருவருமே தொடர்ந்து ஒரு ஓவருக்கு 8 ரன்கள் என்ற விகிதத்தில் ரன் குவித்தனர்.
ஒரு கட்டத்தில் இருவரும் சதம் அடித்தனர். இளம் வீரரான ரச்சின் ரவீந்திரா 23 வயதில் தான் ஆடும் முதல் உலகக்கோப்பை போட்டியிலேயே சதம் அடித்தார். மேலும் 82 பந்துகளில் சதம் கடந்த அவர் நியூசிலாந்து அணிக்காக உலகக்கோப்பை போட்டியில் விரைவாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்தப் போட்டியின் முடிவில் ரச்சின் 123 ரன்கள் எடுத்தும், கான்வே 152 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய வம்சாவளி வீரரான ரச்சின் ரவீந்திராவின் தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி பெங்களூரில் வேலை செய்தவர். அங்கேயே அவர் கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடி இருக்கிறார். பின் நியூசிலாந்து புலம் பெயர்ந்தார். கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் தன் மகனுக்கு ராகுல் டிராவிட் - சச்சின் டெண்டுல்கர் பெயரை சேர்த்து ரச்சின் என பெயர் வைத்தார்.


Click it and Unblock the Notifications