ENG vs SL: பேட்டிங் ஆவரேஜ் 89.. யாரு தம்பி நீ.. மிரள வைத்த இளம் இலங்கை வீரர்.. புதிய ரன் மெஷின்
லண்டன்: இலங்கை அணியின் இளம் வீரர் கமிந்து மென்டிஸ் பேட்டிங்கில் பட்டையை கிளப்பி வருகிறார். இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ள அவரது பேட்டிங் சராசரி 89 ஆக உள்ளது. அதிலும் குறிப்பாக தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் அவர் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்து இருக்கிறார்.
இங்கிலாந்து மண்ணிலேயே ரன் குவிப்பில் ஈடுபட்டு இருக்கிறார். அதனால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இலங்கையின் வருங்கால நட்சத்திரம் என பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இக்கட்டான நிலையில் அவர் 113 ரன்கள் குவித்து இருந்தார். அதன் மூலம் இங்கிலாந்து அணி நான்காவது இன்னிங்ஸில் 205 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தான் வென்றது. அந்த அளவுக்கு அந்த அணிக்கு இலங்கை அணி அழுத்தம் கொடுக்க முக்கிய காரணம் கமிந்து மென்டிஸ் தான். அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணியை கரை சேர்க்க தனி ஆளாக போராடினார் கமிந்து மென்டிஸ்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 427 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆடிய இலங்கை அணி பேட்டிங்கில் சொதப்பியது. ஆனால், ஏழாம் வரிசையில் களமிறங்கிய கமிந்து மென்டிஸ் 120 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 196 ரன்கள் எடுத்தது. இந்த இன்னிங்ஸ் முடிவில் கமிந்து மென்டிஸ் 5 டெஸ்ட் போட்டிகளில் 8 இன்னிங்ஸ் பேட்டிங் செய்து 627 ரன்கள் குவித்து இருந்தார். அவரது பேட்டிங் சராசரி 89 ஆக இருந்தது. இதுவரை மூன்று சதம் மற்றும் மூன்று அரைசதங்கள் அடித்து இருக்கிறார்.
தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் இது மிக அதிக பேட்டிங் சராசரியாகும். அவர் இன்னும் அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பின்னரும் இதே அளவு பேட்டிங் சராசரி வைத்திருந்தால் நிச்சயமாக உலகின் முன்னணி டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆக கவனத்தை ஈர்ப்பார்.
இலங்கை அணி தற்போது மிக மோசமான நிலையில் இருக்கிறது. கமிந்து மென்டிஸ், பதும் நிசங்கா போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக ஆடி வருவது மட்டுமே அந்த அணிக்கு ஒரே ஆறுதலாக உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பின்னடைவை சந்தித்து இருக்கிறது.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி 256 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 50 முதல் 100 ரன்கள் சேர்த்தால் கூட இலங்கை அணிக்கு 300 முதல் 350 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்படும். இலங்கை அணி அத்தனை பெரிய இலக்கை சேஸிங் செய்து எட்ட முடியுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Story first published: Saturday, August 31, 2024, 10:49 [IST]
Other articles published on Aug 31, 2024


Click it and Unblock the Notifications