ENG vs SL: பந்தை வைத்து ஏமாற்றிய அம்பயர்? உடைந்து போன இலங்கை அணி.. ஏஞ்சலோ மேத்யூஸ் புகார்
மான்செஸ்டர்: இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் அம்பயர்கள் விதிக்கு முரணாக பழைய பந்துக்கு பதிலாக, புதிய பந்தை மாற்றியதால் இங்கிலாந்து வீரர்கள் விக்கெட் வீழ்த்தி இலங்கை அணிக்கு எதிராக வெற்றி பெற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 236 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 358 ரன்கள் எடுத்தது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ரன் குவித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையில் களம் இறங்கிய இலங்கை அணி ஒரு ரன் எடுத்து இரண்டு விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது.

அதன் பின் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் கமிந்து மென்டிஸ் அபாரமாக ரன் குவித்தனர். இதனிடையே அம்பயர் திடீரென பந்தை மாற்ற முடிவு செய்தார். பந்து அதன் வடிவத்தை இழந்து விட்டதாக இங்கிலாந்து வீரர்கள் கூறியதை அடுத்து அம்பயர் பந்தை மாற்ற ஒப்புக்கொண்டார். ஆனால், அப்போது ஒரு சிக்கல் எழுந்தது.
பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் பந்தை மாற்ற வேண்டும் என்றால் பழைய பந்தைத்தான் மாற்றுவார்கள். ஏற்கனவே, பயன்படுத்தப்பட்ட பழைய பந்து தான் போட்டியின் இடையே மாற்ற அனுமதிக்கப்படும். அம்பயர்கள் வசம் பல பழைய பந்துகள் இருக்கும். அதில் ஒரு பந்தை அவர்களே தேர்வு செய்வார்கள். ஆனால், இந்தப் போட்டியின் இடையே பழைய பந்து எதுவும் கைவசம் இல்லை என்பதால் புதிய பந்தை மாற்றுவதாக அம்பயர் அறிவித்தார்.
அது தொடர்பான விதிகளில் குழப்பம் இருந்த நிலையில் இலங்கை வீரர்கள் வேறு வழியின்றி அரை மனதுடன் அதை ஏற்றுக் கொண்டனர். புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்பதால் அதை பயன்படுத்திய இங்கிலாந்து வேகப் பந்து வீச்சாளர்கள் ஏஞ்சலோ மேத்யூஸ் விக்கெட்டை வீழ்த்தியதுடன், வரிசையாக விக்கெட்களை சாய்த்து அழுத்தம் கொடுத்தனர்.
கமிந்து மென்டிஸ் சதம் அடித்தது மட்டுமே இலங்கை அணிக்கு ஆறுதலாக அமைந்தது. இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. 5 விக்கெட் இழந்த நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை எட்டியது. போட்டி முடிந்த உடன், அம்பயர் பழைய பந்துக்கு பதிலாக புதிய பந்தை மாற்றியது சர்ச்சையாக மாறியது.
இந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்த நிலையில் ஏஞ்சலோ மேத்யூஸ் இது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். "இங்கிலாந்து அணி என்ன செய்வது என தெரியாமல் தவித்த போது, அம்பயர் பந்தை மாற்ற முடிவு செய்தார். பழைய பந்து இல்லை என எங்களுக்கு சொல்லப்பட்டது. அதனால் புதிய பந்தை மாற்றினார்கள். அது போட்டியையும் மாற்றியது. நாங்கள் பந்தை பழையதாக மாற்றி வைத்து இருந்தோம். அதற்காக பந்தை கடுமையாக அடித்து இருந்தோம். ஆனால் புதிய பந்தை மாற்றியதால் போட்டி அவர்களுக்கு சாதகமாக மாறியது." என்றார்.


Click it and Unblock the Notifications