லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் மேலும் ஒரு இமாலய சாதனையை முறியடித்து இருக்கிறார். இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன ஜோ ரூட் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இரண்டு சதங்கள் அடித்தார். அதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 34 டெஸ்ட் சதங்களை அடித்து தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களிலேயே அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை செய்தார்.

தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 13 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார் ஜோ ரூட். அதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக 12,402 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் குமார் சங்ககாராவை முந்தி ஆறாவது இடத்தை பிடித்து இருக்கிறார்.
சங்ககாரா 134 டெஸ்ட் போட்டிகளில் 12,400 ரன்கள் குவித்து இருந்தார். அவர் 38 சதம் மற்றும் 52 அரை சதங்களை அடித்து இருந்தார். தற்போது ஜோ ரூட் 146 டெஸ்ட் போட்டிகளில் 12,402 ரன்கள் அடித்து அவரை முந்தி ஆறாவது இடத்தை பிடித்து இருக்கிறார் இன்னும் 71 ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் இங்கிலாந்து ஜாம்பவான் அலஸ்டர் குக் உடைய அதிக ரன்கள் சாதனையை முறியடித்து ஐந்தாவது இடத்தை பிடிப்பார் ஜோ ரூட்.
சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரராக இருக்கிறார். 200 டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்கள் குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் அந்த சாதனையை முறியடிக்க ஜோ ரூட்டுக்கு இன்னும் 3,520 ரன்கள் தேவை. தற்போது 33 வயதாகும் ஜோ ரூட் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.