சச்சினை விடுங்க.. டிராவிட்டின் மெகா சாதனைக்கு வேட்டு வைத்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்
லண்டன்: இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அதிக டெஸ்ட் சதங்கள் மற்றும் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்து பல்வேறு சாதனைகளை உடைத்து இருக்கிறார். சச்சினின் அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த சாதனையை அவர் நெருங்கி வருகிறார். அதே சமயம், அவர் மற்றொரு இந்திய டெஸ்ட் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் முக்கிய ஃபீல்டிங் சாதனை ஒன்றையும் விரைவில் முறியடிக்கப் போகிறார்.
அடுத்த சில டெஸ்ட் போட்டிகளிலேயே ஜோ ரூட், ராகுல் டிராவிட்டின் அதிக டெஸ்ட் கேட்ச் சாதனையை முறியடிக்க உள்ளார். இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட் இரண்டு கேட்ச்களை பிடித்து இருந்தார். அதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 கேட்ச்களை பிடித்து புதிய மைல் கல் சாதனை படைத்தார்.

உலகிலேயே அதிக டெஸ்ட் கேட்ச்கள் பிடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் 210 கேட்ச்களை பிடித்து அதிக டெஸ்ட் கேட்ச்கள் பிடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். இலங்கை அணியின் மகிளா ஜெயவர்தனே 205 கேட்ச்கள் பிடித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
ஜோ ரூட் 200 கேட்ச்களுடன் மூன்றாவது இடத்தை தென்னாப்பிரிக்காவின் ஜாக்கஸ் காலிஸ் உடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். இதன் மூலம் அடுத்த சில போட்டிகளிலேயே ஜோ ரூட், ராகுல் டிராவிட்டின் அதிக கேட்ச் சாதனையை முறியடித்து விடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியல் -
ராகுல் டிராவிட் - 164 போட்டி - 301 இன்னிங்ஸ் - 210 கேட்ச்
மகிளா ஜெயவர்தனே - 149 போட்டி - 270 இன்னிங்ஸ் - 205 கேட்ச்
ஜோ ரூட் - 145 போட்டி - 275 இன்னிங்ஸ் - 200 கேட்ச்
ஜாக்கஸ் காலிஸ் - 166 போட்டி - 315 இன்னிங்ஸ் - 200 கேட்ச்
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 427 ரன்கள் குவித்து இருந்தது. ஜோ ரூட் 143 ரன்களும், கஸ் அட்கின்சன் 118 ரன்களும் குவித்து இருந்தனர். அடுத்து ஆடிய இலங்கை அணி 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 251 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஜோ ரூட் 103 ரன்கள் குவித்து இருந்தார். இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இரண்டு சதங்கள் அடித்ததன் மூலம் ஜோ ரூட் டெஸ்ட் வரலாற்றில் 34 சதங்கள் அடித்து பல சாதனைகளை செய்து இருந்தார். தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் அதிக சதங்கள் அடித்த வீரர் ஜோ ரூட் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி, இலங்கை அணிக்கு 483 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 53 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து உள்ளது. இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications